3447. கோபமே வருமோ காமமே வருமோ
கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ
தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ
பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன்
றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
உரை: கோபம், காமம், மோகம், மதம், லோபம், மாற்சரியம், ஆங்காரமாகிய குற்றங்களும், இக் குற்றங்களுக்கு ஏதுவாகிய தாமத குணமும் என்பால் வந்திடுமோ என்று நான் தளர்ச்சியுற்றதை ஐயனாகிய நீ நன்கு அறிவாய். எ.று.
மோகம் - மயக்கம். செய்வன தவிர்வனவற்றைத் தெரிந்துணராதபடி மயக்குதலின் மோகத்தை, “கொடிய மோகங்கள்” என வுரைக்கின்றார். மதம் - செருக்கு. சபிக்கப்பட்டது போலக் குணம் செயல்கள் சிதைதலால் மதமாகிய குற்றத்தை, “சாபமே அனைய தடை மதம்” எனச் சாற்றுகின்றார். தாமத குணம் நல்வினை நற்செயல்களைச் செய்யவிடாது தடுப்பதை, “தாமதப் பாவி” என வெகுண்டு உரைக்கின்றார். உலோபம் - கடும் பற்றுள்ளம்; இதனால் பாவச் செயல்கள் புரிதலின், “பாபமே புரியும் லோபம்” எனப் பகர்கின்றார். மாற்சரியம் - மனத்திலுளதாகும் மாறுபாட்டுணர்வு. செய்வினைக்கண் உளதாகும் நற்பயன் எனத் தாக்கிக் கெடுத்தலின், “பயனில் மாற்சரியம்” என வுரைக்கின்றார். ஆங்காரம் என்னின் மிக்கார் யாரென எழும் தருக்குணர்வு. அதனால் தனக்கும் பிறர்க்கும் வருத்தமே விளைதலின், “தாப ஆங்கார” மெனக் குறிக்கின்றார். இவ்வகைக் குற்றங்களும் எதிர்பாரா வகையில் எழுவனவாகையால், இவை வருமோ வருமோ என்று அஞ்சி வடலூர் வள்ளல் மனம் தளர்வது பற்றி, “ஐய நான் தளர்ந்ததும் அறிவாய்” என மொழிகின்றார்.
இதனால், காமம் வெகுளி முதலாய அறுவகைக் குற்றங்களும் தம்பால் உளவாமோ என வடலூர் வள்ளல் அஞ்சிய திறம் விளம்பியவாறாம். (38)
|