3448.

     காமமா மதமாங் காரமா திகள்என்
          கருத்தினில் உற்றபோ தெல்லாம்
     நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான்
          நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
     சேமமார் உலகில் காமமா திகளைச்
          செறிந்தவர் தங்களைக் கண்டே
     ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும்
          ஐயநின் திருவுளம் அறியும்.

உரை:

     காம விச்சையும் பெரிய செருக்கும் ஆங்கார முதலியனவும் என் மனத்திற் பொருந்தித் தாக்கிய காலங்களி லெல்லாம் அச்சம் நிறைந்த உள்ளத்துடன் நான் அடைந்த அச்சத்தை, நீ நன்கு அறிவாய்; நலம் பொருந்திய உலகில் காம முதலிய இச்சைகளில் அழுத்திய கீழ் மக்களைக் கண்ட போது ஆமை போல நான் அடங்கி யொடுங்கினேனாக, ஐயனே, அதனையும் நீ தெளிவாக அறிவா யன்றோ. எ.று.

     போக்குதற் கரிய வன்மை புலப்பட, செருக்கினை “மாமதம்” என்று குறிக்கின்றார். காம முதலிய குற்றங்களை முதலிய குற்றங்களை மனத்திற் றோன்றிச் செயற்கண் விளங்கி நிற்றல் பற்றி, “கருத்தினில் உற்ற போது” என வுரைக்கின்றார். நாமம் - அச்சம். காம முதலிய குற்றங்கள் மனத்தின்கண் உறும்பொழுது வள்ளற் பெருமான் அறிவுறை போகாது, அவற்றால் விளையும் குற்றத்தை எண்ணி அஞ்சினமை விளங்க, “நான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய்” என நவில்கின்றார். சேமம் - இந்நாளில் க்ஷேமம் என்று வழங்குகிறது. குற்றங்களைக் கடிந்து நன்னெறிக்கண் ஒழுகுபவர்க்குப் புகழும் புண்ணியமும் எய்தும் நல்லுலகம் என்றற்குச் “சேமமார் உலகு” என்று சிறப்பிக்கின்றார். காமமுதலிய குற்றங்களை யுடையராய் அவற்றின் நினைவு செயல்களில் மூழ்கியிருப்பவர், எத்தகைய கீழ்மைச் செயல்களையும் செய்வராதலால், அவர்களைக் கண்டால் நற்பண்புடையோர் அஞ்சி நாணி விலகி நிற்பது பற்றி, “ஆமை போல் ஒடுங்கி யடங்கினேன்” என வுரைக்கின்றார். அச்சமும் அவலமும் தோன்றியபோது தன்னுடைய தலையையும் கால்களையும் உடற்குள் ஒடுக்கி யடக்கிக் கொள்வது ஆமைக்கு இயல்பாதல் கண்டு, “ஆமை போல் ஒடுங்கி யடங்கினேன்” என மொழிகின்றார்.

     இதனாற், காம முதலிய வேட்கை வயப்பட்டு ஒழுகுபவர்களைக் கண்டுவள்ளற் பெருமான் அஞ்சி யொடுங்கி வாழ்ந்த திறம் எடுத்தோதியவாறாம்.

     (39)