3449. கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன்
காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி
வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம்
நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப்
படுத்ததும் ஐயநீ அறிவாய்.
உரை: அம்பலத்தில் திருக்கூத்தாடும் பெருமானே, எந்தையே, நின் திருக்கோயிலுட்புகுங்கால் கருத்து வேறுபட்டு நினது திருக்கோலத்தைக் கண்ட காலத் தெல்லாம், வருத்தமுற்றுத் திரும்பி வந்து குற்றத்தை யுணர்ந்து நான் மனம் நொந்து மெலிந்ததை நீ அறிவாய்; அன்றியும் அங்கே நின்னைத் துதி செய்த போது மதம் ஒன்றி நின்று உருக்கம் எய்தாமையால் நான் உள்ளம் நடுங்கிப் பருத்த எனது உடம்பைக் காண்பதற்கும் அஞ்சிப் படுத்துக் கிடந்தது நீ நன்கறிவாய். எ.று.
நிருத்தம் - கூத்து. பொற்சபையிலும் சிற்சபையிலும் கூத்தாடும் பெருமானாதலால், “நிருத்தனே” எனப் போற்றுகின்றார். திருக்கோயிலுட்புகுங்கால் வழிபாட்டின்கண் கருத்துடையராய்ச் செல்ல வேண்டுவது நல்லறமாக, யான் வேறுபட்ட கருத்துடன் கோயிலுட் புகுந்தே னென்பாராய், “கருத்து வேறாகிக் கோயிலிற் புகுந்து” எனவும், அங்கே நின் திருக்கோலத்தைக் கண்ட போதும் கருத்து ஒன்றினேனில்லை என வருந்துவாராய், “உன் காட்சியைக் கண்டபோதெல்லாம் வருத்தமே யடைந்தேன்” எனவும் உரைக்கின்றார். திருக்கோயிலின் நீங்கி வெளிப் போந்து உறைவிடம் அடைந்த போதும் அவ்வருத்தம் நீங்காமை தோன்ற, “பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன்” என்று கூறுகின்றார். வழிபாட்டில் கருத்து வேறுபட்டுத் துன்புற்ற நக்கீரர் முதலியோர் வரலாறு நினைவிற் போந்தமையின் வள்ளற் பெருமான் அஞ்சினாராகலின், “பயத்தொடும் திரும்பி வந்து” எனவும், செய்த குற்றம் நெஞ்சிற் கிடந்து வருத்தினமையின், “நொந்து இளைத்தனன்” எனவும் இயம்புகின்றார். இறைவன் திருமுன்பு நின்று பரவும் போது அன்பால் மனம் உருகினாலன்றி மனவொருமையும் நற்பயனும் உண்டாகா வென்பவாகலின், “நின்னைத் துதித்த போதெல்லாம் நெகிழ்ச்சி யில்லாமையால் நடுங்கி” என இசைக்கின்றார். நெஞ்சில் உருக்கமும் உடம்பின்கண் மென்மையும் இல்லாமையால் “பருத்த என் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐய நீ அறிவாய்” எனச் சொல்லி வருந்துகின்றார்.
இதனால், வழிபாட்டில் கருத்தொருமையும் மனவுருக்கமும் இல்லாமை சொல்லி வருந்தியவாறாம். (40)
|