3450.

     புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
          புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
     என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
          ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
     வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
          மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
     என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
          இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

உரை:

     என் பொல்லா மணியாகிய பெருமானே! புலால் நாறும் உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இவ்வுடம்பினுள் கலந்திருக்கின்ற கலப்பையும், பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ யறிந்திருக்கின்றாய்; வன்கண்மையை உறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு அறிவு மயங்கி மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் என்பெலாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவா யன்றோ. எ.று.

     துளைக்கப் படாத மணியைப் பொல்லா மணியென்பர். அஃது இங்கே “பொல்லா மணி” என வந்தது. இது மரூஉ முடிபு. புலால் நாறும் பொருள்களில் உடம்பின்கண் எழும் நாற்றம் மிக்கதாகலின், “புன் புலால் உடம்பு” என்று கூறுகின்றார். இவ்வுடம்பினுள் கலந்து ஒன்றியிருக்கின்ற தமது இருப்பை, “இதனிற் புகுந்து நானிருக்கின்ற புணர்ப்பும்” என்று கூறுகின்றார். உடம்பில் புலால் நானிருக்கின்ற புணர்ப்பும்” என்று கூறுகின்றார். உடம்பில் புலால் நாறும் தன்மையும் அதனைப் பொறுக்க மாட்டாத தன்மையும் ஒன்றுக் கொன்று மாறுபடுதலின், இதனுள் கலந்திருக்கும் கலப்பு வியப்பைத் தருதலால், “நான் எண்ணி எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்” என வுரைக்கின்றார். புலால் உணவை வெறுப்பவர் ஆதலின் அதனை உண்போரை உயிர்க் கொலைக்கு அஞ்சாதவர் என்று கருதி அவர்களைக் காண அஞ்சுகின்றமை புலப்பட, “வன்புலாலுண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி யுண்ணடுங்கி யாற்றாமல் என்பெலாம் கருக இளைந்தனன்” என இயம்புகின்றார்.

     இதனால், வள்ளற் பெருமானுடைய புலாலை வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தவாறாம்.

     (41)