3451. இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ
டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம்
மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத்
தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம்
நொந்ததும் ஐயநீ அறிவாய்.
உரை: சந்திரன் இருந்து விளங்கும் சடையையுடைய சிவபெருமானே! கலையறிவு பொருளாக என்னோடு தருக்கம் செய்ய வந்தவர்களைக் கண்டவிடத் தெல்லாம் நான் உள்ளத்தில் அஞ்சினேன்; அன்றியும் ஒருகால் கண்டு பயின்ற சாத்திரங்களை மீளவும் கண்ட போதும் உலகியல் நூல்களைக் கண்டபோதும் என்னுள்ளம் அஞ்சி அஞ்சி வருந்திற்று; இவையெல்லாம் தேவரீர் அறிந்தவை யன்றோ. எ.று.
சமய வாதிகளும், பொருள் உண்மை காண்பவர்களும் வாதப் பிரதிவாதங்களால் தருக்கம் புரிந்து உண்மை காணும் முறை பற்றி, “இயல்கலைத் தருக்கம் செய்திடவே வந்தவர்” எனவுரைக்கின்றார். அவர்களுடைய தருக்க வாதங்கள் வெறும் காலக் கழிவாய் ஒழிவது பற்றிச் சமயச் சான்றோர்கள் தருக்கவாதங்களையும் அவர்களுடைய வாதங்களையும் விரும்புவ தில்லையாதலால் அவர்களை, “கண்ட போதெல்லாம் மனம் மிக நடுங்கினேன்” எனவுரைக்கின்றார். திருஞான சம்பந்தரும் “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா, சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாசுரம்) என்று சொல்லுவது காண்க. இருவர் மூவராய்க் கூடியிருந்து படிக்கப் படுவது பற்றிச் சாத்திரங்களைப் படித்ததை, “சந்தியுற்றொருகால் படித்த சாத்திரத்தை” என்று கூறுகின்றார். சந்தி - கூடுதல். சாத்திரப் பொருள்களும், தருக்க முறையில் அமைந்திருப்பது பற்றி, “ஒருகால் படித்த சாத்திரத்தைத் தமியனேன் மீளவும் கண்டு நான் மனம் நொந்தேன்” என மொழிகின்றார். தமியன் - தனியவன். உலகப் படிப்புச் சிவஞானம் பெற உதவுதல் இன்மையால் “உலகப் படிப்பில் என் உள்ளம் நொந்தது” என இயம்புகின்றார்.
இதனால், தருக்க நூல்களிலும் உலகியல் கல்வியிலும் வள்ளற் பெருமானுக்கு விருப்பின்மை விளம்பியவாறாம். (42)
|