3453. பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய்
பண்பனே நண்பனே உலகில்
ஓதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால்
ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் தபின்தன்
வள்ளல்உன் அருளினால் அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம்
மெய்யனே நீஅறிந் ததுவே.
உரை: பதிப் பொருளாகிய பரமனே, அம்பலத்தில் மேலான ஞான நாடகம், புரிகின்ற பண்புடையவனே, எனக்கு நண்பனே, இவ்வுலகின்கண் ஒதி மரம் போல்கின்ற நான் பிறரோடு உரத்த குரல் எடுத்து சில வாதங்களைச் செய்து நல்லறி வில்லாமையால் அகங்காரத்தோடு பேசிப் பின்பு வள்ளலாகிய உனது திருவருளால் செய்த தவற்றையறிந்து அது செய்தற்கு நேர்ந்த விதியை நொந்து நான் மனம் வருந்திய திறத்தை மெய்யனாகிய நீ இனிதறிவாய். எ.று.
உலகுயிர்கட்கு எல்லாம் முதல்வனாதலின், சிவனைப் “பதியனே” என்று குறிக்கின்றார். பொது - தில்லையம்பலம். சிவபெருமான் அம்பலத்தில் ஆடுகின்ற நாடகங்களுள் ஞான நாடகம் உயர்ந்ததாகலின், “பரம நாடகம் செய் பண்பனே” என்று பகர்கின்றார். அறிவு அயருங்காலத்து நல்லுணர்வை உள்ளிருந்து உணர்த்துதலின் “நண்பனே” என்று உரைக்கின்றார். உரத்த வார்த்தைகள், மிக்க வொலி செய்து பேசும் பேச்சுக்கள் உரத்த குரலெடுத்துப் பேசுவது எனினும் அமையும். வாதம் புரிதலாவது ஏது எடுத்துக் காட்டுகளால் தாம் கொண்ட கொள்கையைச் சாதித்தல். வாதத்தின் பயனில்லாமையை யுணராது அகங்காரத்தோடு நின்றமை புலப்பட, “மதியிலாமையினால் அகங்கரித்து” என்று கூறுகின்றார். அதன் பயனின்மையை மனவமைதியுற்றுப் பின்னர் உணர்ந்தமையின், “வள்ளல் உன் அருளினால் அறிந்தே” என மொழிகின்றார். பயனில்லாத வாதங்களால் காலம் கழித்த குற்றத்திற்கு வருந்துகின்றாராதலால், “விதியை நான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே” என விரித்துரைக்கின்றார்.
இதனால், வீண் வாதம் புரிந்து அகங்கரித்தமைக்கு வருந்திய திறம் கூறியவாறாம். (44)
|