3454.

     அருளினை அளிக்கும் அப்பனே உலகில்
          அன்புளார் வலித்தெனக் கீந்த
     பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம்
          புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்.
     மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து
          மனமிக இளைத்ததும்பொருளால்
     இருளுறும் எனநான் உளம்நடுங் கியதும்
          எந்தைநின் திருவுளம் அறியும்.

உரை:

     திருவருள் ஞானத்தை நல்கும் தந்தையே, உலகில் என்பால் அன்புடையவர்கள் வலிந்தளித்த பொருள்களை வாங்கிக் கொண்டு போன போதெல்லாம் என் மனம் வருந்திய வருத்தத்தை நீ நன்கு அறிகுவாய்; மனத்தை மயக்கும் அப் பொருளைச் சாலகத் தெறிந்து பின்னர் அதற்காக மனம் சோர்ந்ததும், பொருள் பெருகினால் மனம் அறியாமை யிருளில் அழுந்து மெனக் கருதி நான் நெஞ்சு நடுங்கியதும், தேவரீரது திருவுள்ளம் அறியும். எ.று.

     இறைவன் அருளுவது எல்லாம் திருவருள் ஞானமாதலால் அதனை “அருளினை அளிக்கும் அப்பனே” என வுரைக்கின்றார். அன்பர்கள் அன்பால் நன்பொருளை அன்பர்களுக்கு வேண்டா மெனினும் ஏற்குமாறு வற்புறுத்துவது, இயல்பாதலும், அன்பராயினார் ஏற்றலும் உலகியல் முறையாதலின், “உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த பொருளினை வாங்கிப் போன போதெல்லாம்” எனப் புகலுகின்றார். பிறர்க்குரிய பொருளொன்றினை யவரே விரும்பி வழங்கினும் பெறலாகாது என்ற கொள்கையால் வாழ்கின்றவராதலின், அன்பர்கள் அளித்த பொருளை வாங்கிச் சென்ற போது மனம் வருந்திய கூறுபாட்டை, “புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய்” என வுரைக்கின்றார். பொருள் பெற்ற வழி அதன்பால் அன்பு பெருகி அதனைக் காத்தற்கு மனம் இறுகிக் கெடுவதால், “மருளும் அப்பொருள்” என உரைக்கின்றார். மனமகிழ்ச்சிக்கு இடம் கொடாது காத்தற்கு அப்பொருளைப் புறத்தே வீசி யெறிந்தமை விளங்க, “சாலகத் தெறிந்து” என்றும், பின்னர் அப்பொருட்காக மனம் வருந்தினமை தோன்ற, “மனம் மிக இளைத்ததும்” என்றும் இயம்புகின்றார். பொருள் சேர்ந்த வழி அதன்பால் பற்றுப் பெருகி நன்நினைவுகட்கு இடமாகாதவாறு மனவிருளை மாய்ப்பதால், “பொருளாம் இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும்” என்று பொருளைப் புறக்கணித்தற்குக் காரணம் கூறுகின்றார்.

     இதனால் அன்பர் அளித்த பொருளிடத்தும் இச்சை கொள்ளாத திறம் எடுத்துரைத்தவாறாம்.

     (45)