3455.

     பொருளிலே உலகம் இருப்பதா தலினால்
          புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
     மருவினால் பொருளின் இச்சையால் பலகால்
          மருவுகின் றான்எனக் கருதி
     வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும்
          மேவிலேன் எந்தைநீ அறிவாய்
     ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம்
          உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.

உரை:

     பொருட்கும் பொருளை யுடையவர்க்கும் நன்மதிப் பளிப்பது மக்களுலகத்துக்கு இயல்பாதலால், செல்வர் ஒருவரிடம் பலகாற்செல்வோமாயின் பொருளாசை கொண்டு தம்மிடம் பன்னாளும் வருகின்றார் என நினைந்து அஞ்சுவர் எனக் கருதிச் செல்வரை யணுகுதலை நான் தவிர்த்தலை எந்தையாகிய நீ அறிவாய்; யாவர்பாலும் நில்லாது நீங்கும் அப்பொருட் செல்வத்தை நினைத்த போதெல்லாம் மனத்தின்கண் வேண்டா வெறுப்பே கொண்டேன். எ.று.

     “பொருள் துன்னுங்காலைத் துன்னாதன இல்லை” (சீவக) என அறிஞரும், “செல்வரை யெல்லாரும் செய்வர் சிறப்பு” (குறள்) எனச் சான்றோரும் கூறுதலால், “பொருளிலே யுலகம் இருப்பது” என முடிந்த முடிபாக மொழிகின்றார். புரிதல் - விரும்புதல். பொருளால் விளையும் நலம் கண்டு அதனைத் தொகுத்தாளும் செல்வர் தம்மிடம் ஒருவர் பலமுறையும் வருவாராயின், இவர் பொருள் வேண்டி வருகின்றா ரென ஐயுற்று இகழத்தலைப்படுவ ரென அஞ்சினமை தோன்ற, “புரிந்து நாம் ஒருவர்பால் பலகால் மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின்றான் எனக் கருதி வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன்” என வுரைக்கின்றார். மருவுதல் - சேர்தல். வெருவுதல் - அஞ்சுதல். யாவரிடத்தும் நிலை பெறாது நீங்கும் இயல்பினதாகலின், “ஒருவும் அப்பொருள்” எனக் குறிக்கின்றார். ஒருவுதல் - நீங்குதல். உவட்டுதல் - வேண்டாது வெறுத்தல்.

     இதனால், பொருட் செல்வர்பாற் பன்னாளும் செல்வதை வள்ளற் பெருமான் தவிர்ந் தொழுகிய திறம் தெரிவித்தவாறாம்.

     (46)