3456. தகைத்தபேர் உலகில் ஐயனே அடியேன்
தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே
நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே
ஒட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப்
பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
உரை: ஐயனே, தகைமை வாய்ந்த பெரிய இவ்வுலக வாழ்க்கையில் உவகையாற் பூரித்த மனத்துடன் மகிழ்ச்சி மிக்குச் சிறப்புற்ற காலங்களி லெல்லாம் அஞ்சி நடுக்க முற்றேன்; இந்நிலையில் நல்ல குதிரை வண்டி முதலிய வாகனங்களில் ஏறிச் சென்ற போதும், அவற்றை விரைவாகச் செலுத்திய போதும் மனத்தில் அச்சம் கொண்டேன்; என் மேற் பகை கொண்ட அயலார்களுக்கு அஞ்சி அவர் கண்களிற் படாது பதுங்கியும் விலகியும் ஒழுகினேன். எ.று.
தகை - நன்மை தரும் சிறப்பு; அழகுமாம். தகையையுடைய உலகு - தகைத்த வுலகு என வந்தது. வாழ்வாரை நன்கு வாழ்விக்கும் சிறப்புடையதாதலால் உலகு இவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது. உவகை மிக்க விடத்து ஆழ்ந்த நினைவுகளின்றி மனம் பூரிப்படைவதால், “தடித்த வுள்ளத்துடன் களித்து” என வுரைக்கின்றார். நகைப்பின் பின் விளைவு துன்பமாதலால் “நகைத்த போதெல்லாம் நடுங்கினேன்” என்று நவில்கின்றார். நல்ல வாகனம் - செல்வர்கள் இவர்ந்து செல்லும் குதிரை. குதிரை வண்டி, அலங்கரித்த மாட்டு வண்டி முதலியன. உகைத்தல் - செலுத்துதல். அயலார் பகை ஆகாத தொன்று என்று அறிந்தோர் கூறுபவாதலின், “அயலார் பகைகளுக்கு அஞ்சிப் பதுங்கினேன்” என வுரைக்கின்றார். ஒதுங்குதல் - விலகுதல்.
இதனால், உவகை மிக்க விடத்தும் அயலவர் பகைத்த போதும் வள்ளற் பெருமான் வருந்தி ஒழுகிய திறம் தெரிவித்தவாறாம். (47)
|