3457. சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில்
சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்ப்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்
நண்ணியும் பிறவிடத் தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன்
பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன்
விளம்பலென் நீஅறிந் ததுவே.
உரை: நாட்டில் நகர்கண் வாழ்பவர்களின் புற வாழ்வுகளைக் காணினும் பிறர் சொல்லக் கேட்பினும் மனம் துன்புறும் என்று அஞ்சி நகர்கட்குப் புறத்தே யிருக்கும் தோட்டங்களை யடைந்தும் பிற விடங்களில் திரிந்தும் பகற் பொழுதே முழுதையும் நாடோறும் கழித்தேன்; பகலன்றி இரவிலும் இப்படியே மிக்க பல விடங்களில் திரிந்து பொழுது போக்கினேன்; இவை யாவும் நீ அறிந்தவையாதலின், நான் எடுத்துரைப்பது வீண். எ.று.
சகம் - உலகம். எத்திறத்தோறும் இனிது கண்டும் கேட்டும் அறியத்தக்கதாகலின், புற வாழ்வை எடுத்தோதுகின்றார். பகற் போதில் தோட்டங்களில் உலாவுவது காண்பார் உள்ளத்தில் ஐயம் தோற்றுவியாது எனக் கொள்க. இரவில் ஊர்ப் புறங்கட்குச் சென்று திரிந்தமை விளங்க, “இரவு அப்படியே மிகப் பலவிடத்தும் திரிந்தனன்” எனத் தெரிவிக்கின்றார். சஞ்சலம் - துன்பம்.
இதனால், நகர்ப்புற வாழ்வை நயவாமல் பகல் இரவுகளை வள்ளற் பெருமான் கழித்த இயல்பு எடுத்தோதியவாறாம். (48)
|