3458. உருவுள மடவார் தங்களை நான்கண்
உற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர்
உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட
காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவிளம் அறியும் உரத்தசொல் எனது
செவிபுகில் கனல்புகு வதுவே.
உரை: அழகிய பெண்களை நான் கண்ட போது மனம் அஞ்சி நடுங்கினேன். ஒரு மனத்தோடு அவர்கள் வலிந்து என்பால் வந்தபோது வேறோர் அறையில் ஒளிந்து கொண்டு இருந்தேன்; சினமிக்க மனத்துடன் சண்டையில் ஈடுபடுவோருடைய கூக்குரலைக் கேட்ட போது நான் கொண்ட மனக் கலக்கத்தைத் தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும்; உரத்த குரலோசை என் செவிக்குள் புகுமாயின் நெருப்புப் புகுவது போல் அஃது என்னைச் சுடுவது இயல்பாகும். எ.று.
உருவுள மடவார் - அழகு பொருந்திய இளம் மகளிர். அவர்களுடைய அழகிய தோற்றம் மனத்தைக் கலக்குவதால், “உளம் நடுக்குற்றேன்” என்று கூறுகின்றார். ஒருவுளம் - ஒன்றிய மனம். ஆட்களைக் காணும் தோறும் அமையும் நீங்கும் மனம் எனினும் அமையும். உவளகம் - மனைக்குள் இருக்கும் அறைகள். கருவுளச் சண்டை - சினம் பொருந்திய மனத்தால் செய்கின்ற சண்டை. சண்டையிடுவோருடைய உரத்த குரல் இங்கே “கூக்குரல்” எனப்படுகிறது. உரத்த குரலோசை கேட்போரைத் திடுக்கிடச் செய்வதாகலின் இயல்பாகவே மென்மை சான்ற உள்ளமுடைய வள்ளற் பெருமானுக்கு மிக்க அதிர்ச்சியைச் செய்யுமாதலின், “சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் திருவுளம் அறியும்” என்று கூறுகின்றார். உரத்த குரலோசை கேட்கப் பொறாதது வள்ளற் பெருமானின் இயல்பு என்பதை “உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே” என்பது வற்புறுத்துகிறது.
இதனால், வள்ளலாரது உள்ளத்தின் மென்மைத் தன்மை விளம்பியவாறாம். (49)
|