3459. பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும்
பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே
இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும்
நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும்
கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
உரை: பலகார வகைகளை யுண்ட போதும், பாராமுகமாகயிருந்த போதும் கருதிய இளம் மகளிரைக் கூடிக் கலந்து அனுபவித்த போதும், ஏற்ற எண்ணெய் முழுக்காடிய போதும், சிறப்பித்து உரைக்கப்படுகின்ற சங்கீதத்தைக் கேட்ட போதும், மகளிர் நடனங்களைக் கண் பொருந்தக் கண்டுமகிழ்ந்த போதும், நான் கலங்கிய கலக்கத்தைத் தேவரீரது திருவுள்ளம். அறியும். எ.று.
பண்ணி காரங்கள் - இனிய பலகாரங்களாலாகிய திண்பண்டங்கள். பொசித்தல் - புசித்தல் என இந்நாளில் வழங்கும். பாராக் -பராமுகமாகயிருத்தல். தயிலம் - எண்ணெய்; மருந்து எண்ணெயுமாம். நவின்ற சங்கீதம் - புகன்று ஓதப்படுகின்ற சங்கீதம். நடம் - பரத நாட்டியம். நடம் காண்டற் குரியது. சங்கீதம் கேட்டற் குரியது.
இதனால், இன்பானுபவங்களில் வள்ளற் பெருமானுடைய மனம் இசையாமை தெரிவித்தவாறாம். (50)
|