3460.

     நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது
          நண்பினர் உடுத்திய போது
     பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம்
          பயந்தனர் வெய்யலிற் கவிகை
     வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம்
          வெருவினேன் கைத்துகில் வீசி
     அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி
          அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு உயர்ந்த பொற் சரிகை யிட்ட ஆடையைக் கொணர்ந்து உடுத்தின போது நான் அஞ்சின திறத்தைக் கண்டவ ரெல்லாம் தாமும் மனத்தில் அச்சம் கொண்டனர்; வெயில் மிகுதி கண்டு வியந்து என் தலைக்கு மேற் குடையைப் பிடித்த போது மனம் அஞ்சி ஒடுங்கினேன்; மேலாடை காற்றிற் பறக்கப் புழுதி படிந்த தெருவில் நடப்பதற்கு அஞ்சி அதனை இடையில் இறுகக் கட்டிக்கொண்டேன். எ.று.

     பொற் சரிகையிட்ட ஆடை நெசவிற் சிறந்து விலையும் உயர்ந்ததாகலின், “நயந்த பொற் சரிகைத் துகில்” என வுரைக்கின்றார். உயர்ந்த ஆடைகளால் தாமேயன்றித் தமது நண்பர்களை அன்பால் அலங்கரித்தின்புறுவது மெய்ந்நண்பர்கட்கியல்பாதல் பற்றி, “எனது நண்பினர் உடுத்திய போது” என்றும், அதனை யுடுத்துத் தோன்றும் அழகினைக் காண்டற்கு வள்ளற் பெருமான் அஞ்சிய அச்சத்தை நண்பர்கள் கண்டு இவர்க்கு என்னாகுமோ எனப் பயந்து நடுங்கினராதலால், “அப்பயத்தை அறிந்தவரெல்லாம் பயந்தனர்” எனத் தெரிவிக்கின்றார். கவிகை - கைக்குடை. வெயிற் பொருட்டு கைக்குடை யேந்துதற்கும் வள்ளலார், “இதுவும் வேண்டாத ஆடம்பரமாம். என அஞ்சினமை விளங்க, “வெய்யலிற் கவிகை வியந்து மேற் பிடித்தபோதெல்லாம் உள்ளம் வெருவினேன்” என விளம்புகின்றார். தோளிற்போட்டுக் கொள்ளும் நான்கு முழத் துண்டை, “கைத் துகில்” என்று குறிக்கின்றார். அயம் - புழுதி மாவும் மக்களும் வாகனங்களும் இயங்குவதால் புழுதி படிந்திருக்கும் நிலைமை நோக்கி, “அயந்தரு தெரு“ எனக் கூறுகின்றார்.

     இதனால், ஆடம்பர வுடை யணிதல் கைக்குடை யேந்தலாகியவற்றை வள்ளற் பெருமான் வெறுத் தஞ்சிய திறம் கூறியவாறாம்.

     (51)