3461.

     கையுற வீசி நடப்பதை நாணிக்
          கைகளைக் கட்டியே நடந்தேன்
     மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
          மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்
     வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
          வண்ணமும் அண்ணலே சிறிதும்
     பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
          பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

உரை:

     அண்ணலாகிய சிவனே, கைகளைப் பக்கத்தே வீசிக் கொண்டு நடப்பதற்கு நாணி அவற்றை மடக்கி மார்பிற் கட்டிக் கொண்டே நடந்தேன்; என் மேனி வெளிதே தெரிதற் கஞ்சி வெண்மையான ஆடையாற் போர்த்து மறைத் தொழுகுவேன்; நிலத்தில் பிறருடைய கோலங்களையும் நடையையும் தன்மைகளையும் மிகச் சிறிதளவும் உற்று நோக்குவதில்லை; நோக்கிய வழி என் மனத்தில் ஒருவகை அச்சமுண்டாவது இயல்பு. எ.று.

     கை - பக்கம் நடக்கும் போது வலமும் இடமுமாகிய பக்கங்களில் கைகள் அசையுமாயினும் எனக்கு நாண முண்டாகின்றமையால் “கைகளைக் கட்டியே நடந்தேன்” என்று கூறுகின்றார். மெய்யென்றது, மார்பும் முதுகுமாகிய உடம்பின் பகுதிகள். மேனி நலமிகுதி பற்றிப் புறத்தே தோன்றி விளங்கத் தருக்குகின்றானெனப் பிறர் நினைப்பரென அஞ்சி நாணினமை குறிக்க, “மெய்யுறக் காட்ட வெருவி வெண்துகிலால் மெய்யெலாம் மறைத்தேன்” என வுரைக்கின்றார். கோலம் - பொலிவு. நடை - ஒழுக்கம்; நடக்கும் சிறப்பியல்புமாம். வண்ணம் - ஈண்டுத் தன்மை குறித்து நின்றது. கோலமும் நடையும் வண்ணமும் காண்பவர் தம்மில் இகழ்ந்து பேசுவது கருதித் தம்மையும் அவ்வாறு பழிப்பரென அஞ்சுகின்றாராதலின், “நான் ஊன்றிப் பாரத்ததே யில்லை” என்றும், “பார்ப்பனேல் பயம் மிகப் படைப்பேன்” என்றும் இயம்புகின்றார். பயம் - அச்சம்.

     இதனால் பிறருடைய கோலம் நடை வண்ணங்ளைக் காண்டற்கு வள்ளலார் அஞ்சியொழுகிய திறம் தெரிவித்தவாறாம்.

     (52)