3462. வைகிய நகரில் எழிலுடை மடவார்
வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால்
தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும்
பொருள்முத லியகொடுத் திசைத்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக்
கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
உரை: சிவனே, நான் தங்கிய நகரின்கண் அழகிய மகளிர் சிலர் தாமாகவே வலியப் போந்து என் கையைப் பற்றி யீர்த்தும், சமிக்ஞை செய்தும் இச்சையைத் தூண்டும் சொற்களாற் பன்முறை மொழிந்தும், பொய் பல புகன்றும், ஆணையிட்டும், மேல் வீழ்ந்தும், நற்பொருள்களை மிகத் தந்தும் என்னை மயக்க முயன்றனர்; ஆயினும் யான் அவர்களைக் கலந்ததில்லை; அவர்களைக் கண்டு மனம் நடுங்கினேனேயன்றி ஒரு சொல்லும் கடிந்து பேசியதில்லை. எ.று.
வைகுதல் - தங்குதல். எழில் - இயற்கை யழகு. சைகை உள்ளக் குறிப்பைப் புலப்படுப்பனவாதலால், “சைகை வேறுரைத்தும்” என வுரைக்கின்றார். சரச வார்த்தைகள், காம விச்சையைத் தூண்டும் சொற்கள். பலவிசை - பலமுறை. அறிதல் - ஈண்டு மனக் கருத்தை அறிவித் தறிதலை யுணர்த்துகின்றது. கைகலப்பு - கலந்து மகிழ்தல். இச்செய்கைகளால் மனத்தின்கண் வெறுப்பும் வெகுளியும் உண்டாயினும், அவர்களைக் கடிந்து ஒரு சொல்லும் வள்ளற்பெருமான் உரைத்ததில்லை என்பது விளங்க, “அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்” எனக் கூறுகின்றார்.
இதனால், வலிந்து போந்து கூட விழைந்த மகளிர்பால் நடந்து கொண்ட திறம் எடுத்தோதியவாறாம். (53)
|