3464.

     இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த
          இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
     கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது
          காதிலே விழுந்தபோ தெல்லாம்
     விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி
          வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
     உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்
          டுளம்நடுக் குற்றனன் பலகால்.

உரை:

     பிறர்தம் வாழ்வுக்காகத் தொகுத்து வைத்திருந்த பொருளை இரவுப் பொழுதில் கள்ளர்கள் புகுந்து மறைவாகக் கவர்ந்து கொண்டு கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்று மற்றவர்கள் பேசிக் கொள்வதை நான் காதிலே கேட்ட போதெல்லாம் விரைந்து என் உடல் முழுவதும் நெருப்பை மூட்டி வைப்பது போல வெந்து நொந்தேன்; அதனோடு உரத்த ஓசையுடன் ஒருவர் திடீரென வந்த போது எல்லாம் நான் அதிர்ந்து உடல் நடுங்கினேன். எ.று.

     இருப்பு என்பது வாழ்க்கைக்கு வேண்டுமென எனச் சேர்த்து வைக்கும் பொருள்கள்; குறிப்பு மொழி. கரவு - மறைவு; வஞ்சனையுமாம். கவர்ந்து கொண்ட திறத்தையும் அதனால் பொருளையிழந்தவன் படும் துன்பத்தையும், பிறர் வள்ளலார்பால் உரைத்ததை எடுத்தோதுகின்றாராதலால், “எனது காதிலே விழுந்த போதெல்லாம்” என ஓதுகின்றார். விரைவு - எதுகை நோக்கி விரவு என வந்தது. வெதுப்புதல், கொளுத்துதல். உரவு - வலிமை. உரவில் வருதலாவது உரத்த ஒலியுடன் வருதல்.

     இதனால், திடுக்கிடும் நிகழ்ச்சிகளால் வள்ளலார் உள்ளம் பதறிய திறம் இசைத்தவாறாம்.

     (55)