3466. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை
மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்
கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை
அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி
ஏன்எனல் மறந்தனன் எந்தாய்
உரை: நிலத்தின் மேல் நெடிது வந்தமையால் உண்டாகிய வெவ்விய வருத்தத்தைப் பிறர் நினைத்துச் சொல்லி வருந்திக் கண்களில் நீர் சொரியக் கண்டு நானும் கண்ணீர் விட்டு மனம் வருந்தினேன். ஒருவர் என்னருகில் வந்து எனது அயர்விலே உரத்த குரலால் அழைத்த போது அடியவனாகிய நான் திடுக்கிட்டு எண்ணாதன வெல்லா மெண்ணி இவருக்கு யாது தீங்கு உண்டாயிற்றோ என மனம் கலங்கி ஏன் என்று சொல்லக் கூட மறந்து விட்டேன்; இவை யெல்லாம் தேவரீர் நன்கு அறிந்தவை. எ.று.
மண்ணில் நீள்நடை - நிலத்தில் நெடுந் தூரம் நடத்தல். நடந்ததால் வந்த துன்பத்தை “நடந்த வெந்துயர்” என உரைக்கின்றார். மதித்தல் - நினைத்தல் பிறரது துன்பக் கண்ணீர் கண்டவிடத்து மென்மை மனமுடையார்க்குக் கண்ணீர் பெருகுமாதலின், “நானும் கண்ணினீர் விட்டுளம் கவன்றேன்” என்று கூறுகின்றார். கவலுதல் - வருந்துதல். அசப்பு - அயர்ச்சி. எண்ணாது எண்ணுதல் - நினைத்தற்காகாத துன்பங்களை நினைத்தல்.
இதனால், துயர் கேட்டும் அயர்வில் எய்திய குரல் கேட்டும் வள்ளலார் மனம் அதிர்ந்து கவன்ற திறம் கூறியவாறாம். (57)
|