3467. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிலுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே
நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
எந்தைநீ அறிந்தது தானே.
உரை: செல்வம் தேடுவதிலே மிக்க கருத்துடன் இருக்கும் சென்னையில் இருந்தால் உள்ளத்தின் பண்பு சுருங்கி விடும் என்று பயந்து நாட்டில் உள்ள சிறிய ஊர்ப்புறங்களை யடைந்தும், அவற்றை யடுத்த காடுகளிலும், பருக்கைக் கற்கள் நிரம்பிய நிலங்களிலும், புன்செய்க் கொல்லைகளிலும் திரிந்தும் நான் அடைந்த இளைப்பை ஏடுகளில் எழுத முடியாது; இவைகளை எந்தையாகிய நீ அறிவாய். எ.று.
தேடப் படுவது பற்றிச் செல்வம் ‘தேட்டு’ எனப்படுகிறது; ஆடுவது ஆட்டு என்றாற் போல. தீயார் தேட்டைத்தயார் கொள்வர் என்பதும் இவ் வாய்ப்பாட்டைச் சேர்ந்தது. பொன்னும் பொருளுமாகிய செல்வத்தை ஈட்டுகின்ற நெறியில் சிந்தை செல்லுகின்ற போது வேறு பல விரிந்த பண்புகளில் சிந்தையின் செம்மைப் பண்பு சுருங்கி விடுதலின், “சிலுகுறும்” என்று செப்புகின்றார். சிறுகும் என்னும் பொருளதாகிய சில்குறும் என்னும் சொல் சிலு குறும் என வந்துளது. சென்னை என்பது ஆகு பெயரால் சென்னையில் வாழும்மக்கள் கூட்டத்தைக் குறிக்கின்றார். சிறிய ஊர்களில் உள்ள மக்கள் மனம் தமக்குரிய மக்கட் பண்பின் மாண்பு குறையாமையின் “சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் என நவில்கின்றார். பருக்கைக் கற்கள் நிறைந்த நிலப்பகுதியை, “பருக்கைக் கல்” எனக் கூறுகின்றார். புன் செய்க் காடுபுன் செய்க்களம் எனப்படுகிறது. இவைகள் பண்பட்ட நிலப்பகுதிகள் அல்லவாய் இப்பகுதிகளில் வாழும் மக்களும் மிகுந்த மனப்பண்பு இல்லாதவராதலின் இப்பகுதிகளில் திரிந்து மெலிந்து வருந்தினேன் என்பாராய், “திரிந்துற்ற இளைப்பை ஏட்டிலே எழுத முடியுமோ” எனவும். இக்கூற்றின் வன்மையை வற்புறுத்துதற்கு “இவைகள் எந்தை நீ அறிந்தது தானே” என்று கூறுகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் சென்னை வாழ்வை நீங்கியதற்கு அமைந்த காரணம் தெரிவித்தவாறாம். (58)
|