3468.

     என்புடை வந்தார் தம்முகம் நோக்கி
          என்கொலோ என்கொலோ இவர்தாம்
     துன்புடை யவரோ இன்புடை யவரோ
          சொல்லுவ தென்னையோ என்றே
     வன்புடை மனது கலங்கிஅங் கவரை
          வாஎனல் மறந்தனன் எந்தாய்
     அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம்
          என்கொலோ என்றயர்ந் தேனே.

உரை:

     என்பால் வந்தவர்களின் முகத்தைப் பார்த்து இவர்களுக்கு வந்துற்றது என்னையோ, இவர்கள் மனத்தில் துன்புற்றவர்களோ இன்பமுடையவர்களோ, அவர்கள் சொல்லுவது என்னையோ, எனப் பலப்பட நினைந்து வன்மையுற்ற என் மனம் கலக்க முற்றதனால் அவர்களை வாவென்று கூடச் சொல்ல மறந்தேன்; என்பால் அன்புடையவர்களைக் கண்ட போதும் அவர்களுக்கு உற்றது என்னையோ? என்று நினைந்து மனம் தளர்ந்தேன். எ.று.

     வள்ளற் பெருமானைக் காண வந்தவருடைய முகத்தைப் பார்த்து அவர்கள் யாது குறித்து வந்தனர் என அறியாமையினால் மனத்தில் எழுந்த எண்ணங்களை, “என்கொலோ என்கொலோ இவர்தாம் துன்புடையவரோ, இன்புடையவரோ, சொல்லுவ தென்னையோ என்றே கலங்கி” என வுரைக்கின்றார். பலவேறுபட்ட இவ்வெண்ணங்களால் மனம் உறைப்புண்டமை தோன்ற “வன்புடை மனது” என்று சொல்லுகின்றார். அதனுடைய கலக்கத்தால் வருவாரை வா வென்றற்கும் இயலா தொழிவதை நினைந்து, “வாவெனல் மறந்தனன்” என்று கூறுகின்றார். அன்பராயினர் வழக்கம் போல் தம்பால் வந்த போதும் அவர்கட்கு என்ன நேர்ந்ததோ என்று ஓர் எண்ணம் வள்ளலார் உள்ளத்தில் தோன்றி யலைத்தமை குறிப்பாராய், “அன்புடையவரைக் கண்ட போதெல்லாம் என்கொலோ என்று அயர்ந்தேனே” என்று அவலிக்கின்றார்.

     இதனால், தம்பால் வருபவர் மனநிலையை அறிய மாட்டாது வேறு வேறு நினைந்து வருந்திய திறம் விளம்பியவாறாம்.

     (59)