3470.

     பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார்
          பின்முன்நோக் காதுமேல் நோக்கி
     அதிர்ந்திட நடந்த போதெல்லாம் பயந்தேன்
          அவர்புகன் றிட்டதீ மொழிகள்
     பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன்
          புண்ணியா நின்துதி எனும்ஓர்
     முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து
          முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.

உரை:

     புண்ணியப் பொருளாகிய சிவனே, மிதித்தலால் பிதிர்ந்த மண் பொடி எழுந்து பாவி மேனியை மறைக்குமாறு பின்னும் முன்னும் நோக்காமல் மேனோக்கி நிலம் அதிரும்படி வலிய வுடம்பினர் நடக்கும் போதெல்லாம் கண்டும், அவர்கள் வாயாற் சொல்லிய தீச்சொற்கள் என் செவிகளில் நிறைந்து புகும் போதும் நான் மிகவும் அஞ்சினேன்; நின்னைப் பரவித் துதிக்கும் துதி யெனப்படும் பழுத்த இனிய கனிகள் போன்ற சொற்களைக் காணாமல், வெம்பிக் கெட்ட காய் போன்ற சொற்களையே கேட்டு மனம் சோர்ந்தேன், காண். எ.று.

     காலடியின் மனம் பொறாது சிதறிப் பரக்கும் மண் பொடியை, “பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட” என்றும், முன்பின் நோக்கியும் நிலத்தைப் பார்த்ததும் நடப்பது முறையாகவும், அவ்வாறின்றி மேனோக்கி நடக்கும் நடையை, “முன்பின் நோக்காது மேனோக்கி” என்றும், நிலம் அதிர நடப்பது தீதெனக் கருதாமல் “அதிர நடந்த போதெல்லாம் என்றும், இக்குற்ற நடையை மேற் கொண்டவர்களைக் கண்ட போதெல்லாம் நெஞ்சு நடுங்கிய திறத்தைக் கண்ட போதெல்லாம் பயந்தேன்” என்றும் இயம்புகின்றார். இத்தகைய நடையினர் வாயில் வெவ்விய சொற்களே பேசப்படுதலால், அவை தம் செவி நிறையத் தோன்றி போதெல்லாம் வள்ளற் பெருமான் அஞ்சிய நிலையை, “அவர் புகன்றிட்ட தீ மொழிகள் பொதிந் திரு செவியிற் புகுந்தொறும் பயந்தேன்” என்று புகல்கின்றார். இன்சொற்களைக் கனி யெனவும், வன் சொற்களைக் காய் எனவும் குறிக்கும் மரபு பற்றி, “நின் துதியெனுமோர் முதிர்ந்த தீங்கனியைக் கண்டிலேன்” எனவும், வன்சொற்களை “வேர்த்து முதிர்ந்த காய்” எனவும் கூறுகின்றார். வேர்த்தல் - வெம்புதல்.

     இதனால், அதிர்ந்த நடையும் வெஞ் சொல்லும் கண்டும் கேட்டும் வள்ளற் பெருமான் வருந்திய திறம் கூறியவாறாம்.

     (61)