3471. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
உரை: தண்ணீரின்றி வாட்டமுற்ற பயிர்களைக் கண்ட போதும், பசியால் மேனி மெலிந்து வீடு தோறும் சென்றிரந்தும் பசி நீங்காது வருந்தும் வறியரைப் பார்த்தும், நெடிது நின்று வருத்தும் பிணிவுடையராய்த் துன்புறுவோர் கண்ணெதிர் தோன்றக் காணிணும் மனம் மிக வருந்தி நொந்தேன்; ஒப்பற்ற மானமுடையராய் வறுமை யெய்தினமையால் உள்ள முடைந்து மெலிந்தவர்களைக் கண்டு மெலிவுற்றேன். எ.று.
மழை யின்மையாலும் வெயில் வெம்மையாலும் நெல்லும் புல்லுமாகிய பயிர்கள் வாடி யுலர்வது காண வள்ளலார் உள்ளம் வருந்திய இயல்பை, “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” எனவும், பசித் தீ வெதுப்புவதால் வீடு தோறும் சென்று இரந்தும் பெற்றது நிரம்பாமையால் வருந்தும் வறியவர்களை, “பசியினால் இளைத்து வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றவர்” எனவும் உரைக்கின்றார். வெற்றவர்-வெறுமை யுடையவர். வீடு தோறும் சென்று இரந்தும் போதிய உணவு பெறாமை, இன்மையின் கொடுமை மிகுதியைக் குறிக்கிறது; அந்நிலைமை நினைக்கும் நெஞ்சினை வருத்துவதாகலின், “கண்டு உளம் பதைத்தேன்” என வுரைக்கின்றார். நெடுநாட்களாகியும் நீங்காப் பிணியால் துன்புறுவோரை, “நீடிய பிணியால் வருந்துகின்றோர்” என்றும், அவரை நேரிற் காண்பது காண்போர் மனத்தை நோயுறுவிக்குமாதலின், “நேருறக் கண்டுளம் துடித்தேன்” என்றும் எடுத்தோதுகின்றார். ஈடு - ஒப்பு. மானக்கேடு வரின் நல்லோர் உயிர் துறப்பராதலின், அவர்களை “ஈடில் மானிகள்” எனப் புகழ்கின்றார். ஒருவர்பால் ஒன்று இரத்தற்கு மனம் செல்லாத உயர்ந்தோர் வறுமையுற்று வாடுவது மிக்க துன்பமாதலின், “ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்தமைக் கண்டு இளைத்தேன்” என இயம்புகின்றார்.
இதனால், வறுமையால் வாடுவோர் நிலை கண்டு வள்ளற் பெருமான் வாடிய திறம் கூறியவாறாம். (62)
|