3472. நலிதரு சிறிய தெய்வமென் றையோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
கண்டகா லத்திலும் பயந்தேன்.
உரை: துன்புறுத்தும் சிறுதெய்வ மெனச் சொல்லி நாட்டிலுள்ளோர் பல தெய்வங்களின் பெயரைத் தோற்றுவித்து அவற்றிற்குப் பலியிடற் பொருட்டுப் பன்றி, ஆடு, கோழி, எருமைக்கடா முதலியவற்றை அலங்கரித்துக் கொண்டு போவதைப் பார்த்து மனம் நொந்து நடுங்கினேன்; தீது தரும் சிறு தெய்வங்களின் வெவ்விய கோயில்களைக் கண்ட போது நான் அஞ்சினேன். எ.று.
இவ்விடையூறு நீங்கின் இன்னது பலி யிடுவேன் என நேர்ந்து கொள்வது சிறு தெய்வ வழிபாட்டினர் இயல்பு; அது செய்யாவிடில் அச்சிறு தெய்வம் துன்புறுத்தும் என்பது அவர்தம் கொள்கையாதலின், “நலிதரு சிறிய தெய்வம்” என்று குறிக்கின்றார். பல தெய்வக் கொள்கை மெய்ந் நூல்கட்குப் புறம்பாயினும் நாட்டில் உள்ளவர் சமயக் கல்வியின்மையாற் படைத்துக் கொள்ளப்பட்ட தாகலின், “நாட்டிலே பல பெயர் நாட்டி” என வுரைக்கின்றார். நாடுதோறும் ஊர் தோறும் சிறுதெய்வங்கள் பலவாகக் காணப்படுதலால், “பல பெயர் நாட்டி” என நவில்கின்றார். குக்குடம் - கோழி. பலிக்கடா - பலியிடுதற் கென்று கொழுக்க வளர்க்கப்படும் ஆட்டுக்கடா, எருமைக்கடா, முதலியனவாகும். கடா - நூல்களிற் கிடாய் எனவும் வழங்கும். பலியிடும் நாளில் அவற்றை நீராட்டிப் பொட்டிட்டு மாலையணிந்து கொண்டு போதலின், “பொலிவுறக் கொண்டே போகவும் கண்டு” என்றும், அது காண மனம் பொறாத தன்மையைப் “புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்” என்றும் இசைக்கின்றார். புந்தி - புத்தி.. கலி - துன்பம். சிறு தெய்வங்களின் கோயில்கள் பலவுயிர்கட்குக் கொலைக் களமாதல் பற்றிச் “சிறியதெய்வ வெங்கோயில்” என்று பழிக்கின்றார்.
இதனால், சிறு தெய்வங்கட்கு உயிர்ப் பலியிடுவதை வள்ளற் பெருமான் வெறுத்துறைக்கும் திறம் உரைத்தவாறாம். (63)
|