3473.

     துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
          தொடங்கிய போதெலாம் பயந்தேன்
     கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
          கண்டகா லத்திலும் பதைத்தேன்
     மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
          வகைகளும் கண்டபோ தெல்லாம்
     எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
          எந்தைநின் திருவுளம் அறியும்.

உரை:

     கொடியவர்கள் மக்களல்லாத பிறவுயிர்களை அச்சுறக் கொல்லத் தொடங்கிய போதும், அவ்வுயிர்கள் கொலையுண்டு துடிப்பதைக் கண்களாற் கண்டபோதும், ஐயோ, நான் மனம் துடித்தேன்; நிலத்தின் மேல் வேட்டைக் குரிய வலைகளையும் தூண்டிலையும் கண்ணி வகைகளையும் பிறர்பால் இருக்கக் கண்ட காலங்களில் அவற்றாற் கொல்லப்படும் உயிர்களை நினைந்து என் மனம் எய்திய நடுக்கத்தைத் தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியுமன்றோ. எ.று.

     கொடியவர் - உயிர்க் கொலை செய்யும் கொடுமைப் பண்புடையவர். கொலைத் தொழில் காண்பார்க்கு அச்சம் தருவதாகலின் “துண்ணென” எனச் சொல்லுகின்றார். கொல்லப்பட்ட வுயிர்கள் உயிர்ப் பொடுங்குங்காறும் துடித்தல் இயல்பாதலால், “பிறவுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்” என இயம்புகின்றார். பதைத்தல் - துடித்தல். தமது கூற்றின் உண்மையை வலியுறுத்தற்கு “மண்ணினில்” என்று கூறுகின்றார். கண்ணி - பறவைகளைப் பிடிக்கும் வலைவகை. தூண்டில் - மீன் பிடிக்கும் கருவி வகை. வலை முதலியவற்றைக் காணும் போது அவற்றால் கொலையுண்ணும் உயிர்களை அருளாளர் உள்ளம் இரக்க மிகுதியால் எண்ணி வருந்துமாதலின், “எண்ணி” என வுரைக்கின்றார்.

     இதனால், உயிர்க் கொலைக்குரிய கருவிகளைக் கண்டு வள்ளற் பெருமான் கொண்ட வருத்த மிகுதி குறித்தவாறாம்.

     (64)