3474. நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக்
கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம்
பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
உரை: நேர்மையில்லாத மனத்தையுடைய கூட்டத்தாரையும், இரக்கமில்லாத அரசர்களையும், எப்பொழுதும் பிறர்க்குக் கேடு நினைக்கும் சிற்றதிகாரம் செலுத்தும் கெடுமதியாரையும், பொய்யல்லது சொல்லாத கீழ்மை மக்களையும் பார்த்த போதெல்லாம் மனத்தில் அச்ச முற்றேன்; சுத்த சன்மார்க்க நெறியைக் கைவிட்ட உலக நடைகள் பலவற்றையும் கண்டு நான் மிகவும் அஞ்சினேன். எ.று.
நடுநிலை - நடுவு நிலைமை; நீதி நெறியுமாம். உள்ளத்தில் அருட்பண்பில்லாத கொடிய அரசர்கள் வாழ்ந்த காலமாதலின் வள்ளற் பெருமான் அச்சிற்றரசர்களை, “கருணை நண்ணிடா அரையர்” என்றும், அவர்கள் கீழிருந்து பணி புரியும் அதிகாரிகள் சிலர், பிறர்க்குக் கேடு செய்வதே தொழிலாக மேற்கொண்டிருந்தமையால், “நாளும் கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக் கேடர்” என்று பழிக்கின்றார். கேடர் - கேடு செய்பவர். நாளும் பொய்யேயுரைத்துத் தமக்கும் பிறர்க்கும் கேடு விளைப்பவரை, “பொய்யலால் கிளத்தாப் படுநிலை யவரை” என்று தூற்றுகின்றார். படுநிலை - கீழ்மை நிலை. தூய சிவஞான நெறியைச் சுத்த சன்மார்க்க என்பர். அந்நெறியினின்றும் நீங்கிய உலகியல் வாழ்வு வள்ளற் பெருமான் உள்ளத்தை வருத்தினமையால், “உலகநடையெலாம் கண்டு வெருவினேன்” என வுரைக்கின்றார்.
இதனால், சுத்த சன்மார்க்கமில்லாத உலகியலை வள்ளலார் விரும்பாமை விளங்கியவாறாம். (65)
|