3475. ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய
ஒருதனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே
தயாநிதிக் கடவுளே நின்பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும்
அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
உரை: உயர்ந்த தில்லைச் சிற்றம்பலத்தையுடைய ஒப்புயர்வற்ற சிவபெருமானே, அடியவனாகிய என்னைத் தாங்கி யருள்கின்ற தாயும் தந்தையும் குருவுமாகியவனே, திருவருட் செல்வக் கடவுளே, நின்பால் அன்பு நீங்கிய மனமுடையவர் யாவராயினும் அவர்களை நினைக்கும் போதெல்லாம் உள்ளம் தியங்கி அஞ்சினேன்; இது தேவரீரது திருவுள்ளம் அறிந்ததன்றோ. எ.று.
இயற்கை வளத்தாலும் திருவருள் நலத்தாலும் உயர்ந்த திருப்பதியாகலின், “ஓங்கிய திருச்சிற்றம்பலம்” என்று சிறப்பிக்கின்றார். ஒப்பற்ற முழுமுதற் கடவுளாதலின், “ஒரு தனித் தலைவனே” எனவுரைக்கின்றார். உலகிற் பிறந்து வளர்ந்து சிறத்தற்கு உறுதுணையாதலால், “என்னைத் தாங்கிய தாயே தந்தையே குருவே” என்று போற்றுகின்றார். பேரருட் பரம்பொருளாதல் பற்றி, “தயாநிதிக் கடவுளே” என்று சாற்றுகின்றார். திருவருட் செல்வனாகிய சிவனை நினையாதவரை, “நீங்கிய மனத்தார்” என்றும், அவர்கள் உயர்ந்த குலத்துத் தனிநிலைச் செல்வராயினும், அருளில்லாத வன்கண்ணராதலின், அவரை நினைத்தல் தீதாமென்பது பற்றி, “யாவரே யெனினும் அவர்தமை நினைத்த போதெல்லாம் தேங்கிய வுள்ளம் பயந்தனன்” என்றும் தெரிவிக்கின்றார். நினைத்தற்கண் செல்லாமல் சுழித்தலால் “தேங்கிய வுள்ளம்” எனக் கூறுகின்றார்.
இதனாற் சிவனை நினையாதவரை நினைத்தற்கு வள்ளற் பெருமான் அஞ்சும் திறம் கூறியவாறாம். (66)
|