3476.

     காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
          காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
     பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
          பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
     நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
          நன்குறக் களித்துக் கால்கீழே
     நீட்டவும் பயந்தனன் நீட்டிப்பே சுதலை
          நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

உரை:

     உயர்த்திக் காட்டுகின்ற இருக்கையில் அமர்தற்கும், கால்மேற் கால் வைத்து இருத்தற்கும், அயலவர் கேட்குமாறு பாடுதற்கும், பஞ்சு திணித்த படுக்கையிற் படுத்தற்கும், மனைப்புறத்தே உயரமாகச் சமைத்த திண்ணை மேல் அமர்ந்து மகிழ்வு மிகுந்து இருகால்களையும் நீட்டித் தொங்க விட்டிருத்தற்கும், நெடிது நேரம் நீட்டிப் பேசுதற்கும் நான் அஞ்சினேன்; இது தேவரீர் அறிந்ததன்றோ. எ.று.

     மனம் விரும்பிச் சிறப்பாக வீற்றிருக்கச் செய்த அழகிய இருக்கை எனப் புலப்படுத்தற்குக் ”காட்டுயர் அணை” எனக் கூறுகின்றார். கால்மேல் கால் வைத்திருத்தல் இருப்பாரது மனச் செம்மாப்பைத் தெரிவிப்பது. பற்றிக் “காலின் மேற் கால் வைக்கப் பயந்தேன்” என்று கட்டுரைக்கின்றார். கேட்பார் புகழ்தற்கும் இகழ்தற்கும் ஏதுவாதலால் “பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்” எனவும், பஞ்சணை நெடிய உறக்கத்தையும் காம நினைவுகளையும் நெஞ்சில் தோற்றுவித்தலால், “பஞ்சனை படுக்கவும் பயந்தேன்” எனவும் பகர்கின்றார். வீடுகட்குப் புறத்தே உயரமாக வேண்டு மென்றே செய்தமைத்த திண்ணை யென்றற்கு “நாட்டிய திண்ணை” என்றும், காலைத் தொங்கவிட்டிருத்தல், அடக்கமின்மையைப் புலப்படுத்து மென்பவாகலின், “நன்குறக் களித்துக் கால் கீழே நீட்டவும் பயந்தேன்” என்றும், நீட்டிப் பேசுதல் நிரம்பிய கல்வி யில்லாமையை வெளிப்படுத்துதலால், “நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன்” என்றும் இயம்புகின்றார்.

     இதானல் வள்ளற் பெருமானது உயர்ந்த மனவடக்கம் தெரிவித்தவாறாம்.

     (67)