3477. தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம்
சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்
கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள்
பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்
எந்தைநான் கூறுவ தென்னே.
உரை: தலைமை நெறியாகிய சுத்த ஞான சன்மார்க்கத்தை மேற்கொண்டு அந்நெறிக்கண் தக்காங்கு முயலாமல் உலகியலாகிய கலைநெறி காட்டும் வழியில் கருத்தைப் பொருந்த வைத்தவராய், கொலை நெறியை விரும்புகின்றவர்களையும் உலகில் உயிர் வகைகள் அனைத்தும் பொதுவெனக் கொள்ளாது இரக்கமின்றிக் கொலை நெறியில் நிற்பவர்களையும் கண்டு மனம் அஞ்சினேன்; தேவரீர் திருவுளம் அறிந்த தன்றோ. எ.று.
தூய சிவஞானத்தை நல்கும் நெறியாதலின் சுத்த சன்மார்க்கத்தை, “தலைநெறி ஞான சுத்த சன்மார்க்கம்” என உரைக்கின்றார். அந்நான் நெறிக்கண் நிற்பது ஞானப் பேற்றுக்கு வாயிலாதலால் “சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது” என்றும், அது முயலாமை பயனில் செயலாதல் கண்டும் மனம் இரங்குகின்றமை புலப்பட “அந்தோ” என்றும் கூறுகின்றார். உலகியல் நெறி பல்வகைக் கலைகளை காட்டும் நெறியாதலால் அதனைக் “கலைநெறி உலகக் கதி” என்று கூறுகின்றார். உலக நெறியில் ஊறிய கருத்துடையவராவது பற்றி “உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகி” என்று இயம்புகின்றார். புலை நெறி - கீழ்மை நெறி; புலால் உண்ணும் நெறியுமாம். உலகுயிர்கள் அனைத்தும் தன்னுயிர் ஒப்ப எண்ணுதல் பொது இயல்பாதலின், அதனை உணராமல் அவற்றைக் கொன்றுண்ணும் நெறியில் உள்ளவரை “உலகுயிர்கள் பொது எனக் கண்டிரங்காது கொலைநெறி நின்றார்” எனக் கூறுகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் புலால் நெறியில் நின்றவர்களையும், கொலை நெறி யுடையவர்களையும் கண்டு அஞ்சிய திறம் கூறியவாறாம். (68)
|