3478.

     இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங்
          கெய்திய நாளது தொடங்கி
     நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த
          நடுக்கமும் துன்பமும் உரைக்க
     எவ்வணத் தவர்க்கும் அலகுறா தெனில்யான்
          இசைப்பதென் இசைத்ததே அமையும்
     செவ்வணத் தருணம் இதுதலை வாநின்
          திருவுளம் அறிந்ததே எல்லாம்.

உரை:

     சிறியவனாகிய எனக்கு உலகியலறிவு தோன்றிய நாள் முதல் மனம் மெலியும் வண்ணம் இன்றுவரை இவ்வாறு நான் அடைந்த மனநடுக்கமும் துன்பமும் எத்தகையோர்க்கும் உரைக்கும் அளவினதாகாதென்றால் நான் எடுத்துரைப்பது என்னையோ; இதுகாறும் சொன்னதே போதும்; எனக்கு அருளுதற்கு ஏற்ற சமயம் இதுவேயாகும்; தலைவனே! இதையெல்லாம் தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும். எ. று.

     அறிவாற்றலில் சிறுமை யுடைமை தோன்றச் “சிறியேன்” என வுரைக்கின்றார். நைவணம் - மனம் மென்மையுறும் திறம். எவ்வணத்தவர் - எத்தகைய நுண்ணறிவு உடையவர். அலகு - அளவு. இசைத்தல் - சொல்லுதல். தக்க நெறியில் வாய்த்த தருணம் என்பதற்குச் “செவ்வணத் தருணம்” என உரைக்கின்றார்.

     இதனால், தான் அறிவால் பக்குவ முற்றிருப்பது தெரிவித்தவாறாம்.

     (69)