3479. தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத்
தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த
கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும்
எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன்
நீஅறி யாதொன் றுண்டோ.
உரை: நிலவுலகில் எழுபிறப்பும் என்னை விட்டு நீங்காத தலைவன் நீயல்லவோ; என் மனதை யுருக்கி என்னுயிரில் கலந்து கொண்டிருக்கின்ற கடவுள் அல்லவா; என்னை அழைத்து இவ்வுலகில் அருள் செய்த ஒப்பற்ற ஞான சபையில் விளங்குகின்ற என் தந்தை யல்லவா; உன்னிடத்தில் தெரிவித்துக் கொள்வது எனக்கு நல்லொழுக்க மல்லவா; ஆதலால் இதுகாறும் என் மனநிலையைத் தெரிவித்துக் கொண்டேன். எ.று.
உயிர்கள் பலவகையாய்ப் பிறந்து உய்தி பெறற்கு அமைந்ததாதலால், “தரைத் தலத்து” என்று விதந்து கூறுகின்றார். பிறப்பு எழுவகைப்படுதலால் அதனை “எழுமை” என்று கூறுகின்றார். கற் போன்ற மனத்தைக் கனிவித்து அதனுள் எழுந்தருளுதல் கடவுட்கு இயல்பாதலால், “கரைத் துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள் நீ அல்லையோ” என மொழிகின்றார். உணர்வும் வாழ்வும் அளித்தமை பற்றி, “இரைத்திவணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தை நீ யல்லையோ” என வுரைக்கின்றார். இரைத்தல் - அழைத்தல். தமக்குற்ற நலம் தீங்குகளை இறைவனிடத்தில் முறையிட்டுக் கொள்ளுதல் அறிவுடைய உயிர்க்கு நல்லொழுக்கம் என்பது பற்றி, “நின்பால் உரைத்தல் என்னொழுக்கமாதலால் உரைத்தேன்” என இசைக்கின்றார்.
இதனால், இதுகாறும் தன் மனநிலையை எடுத்துரைத்தற்கு அமைதி கூறியவாறாம். (70)
|