3480. கைதலத் தோங்கும் கனியின் என்னுள்ளே
கனிந்தஎன் களைகண்நீ அலையோ
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா
மெய்யன்நீ அல்லையோ எனது
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ
பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன்
திருவுளம் தெரிந்ததே எல்லாம்.
உரை: அங்கையில் கொண்ட கனி போல என் உள்ளத்துக் கனிபோல் இருந்தருளும் ஆதரவாளன் நீயல்லவோ; என்னுடம்பின் அகத்தும் புகத்தும் விட்டு நீங்காத மெய்ம்மை யுடையனல்லவா; எனது துன்பத்தைப் போக்கி யருளும் தந்தையும் நீ யல்லவா; ஆதலால் உனது திருமுன்பு ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தல் எனக்கு நன்னெறி யாதலால் எனது குணம் செயல்களை இதுவரை எடுத்துரைத்தேன்; இவை யாவையும் தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
“கைத்தலத் தோங்கும் கனி” என்பது அங்கையிற்றாங்கும் செங்கனி என்னும் வழக்குப் பற்றியதாம். களைகண் - ஆதரவாளன். மெய்தலம் - உடம்பு. உடம்பினுள் அகத்தும் புறத்தும் நிற்பது பற்றி, “அகத்தும் புறத்தும் விட்டகலா மெய்யன் நீ” என்று உரைக்கின்றார். பைதல் - துன்பம்.
இதனால், தமது குணஞ் செயல்களை இறைவன் முன் எடுத்துரைப்பதற்கு அமைதி கூறியவாறாம். (71)
|