3481.

     இன்னவா றடியேன் அந்சமுந் துயரும்
          எய்திநின் றிளைத்தனன் அந்தோ
     துன்ன ஆணவமும் மாயையும் வினையும்
          சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
     உன்னவா சற்றே உரைக்கவா ஓட்டேம்
          என்பவால் என்செய்வேன் எனது
     மன்னவா ஞான மன்றவா எல்லாம்
          வல்லவா இதுதகு மேயோ.

உரை:

     எனக்கு அரசனே, ஞான சபையை யுடையவனே, எல்லாம் வல்லவனே, இதுகாறும் கூறியவாறு அடியவனாகிய என்னைப் பயமும் துன்பமுமுற்று மனம் சோர்ந்தேன்; ஐயோ நெருங்கிய ஆணவமும் மாயையும் கன்மமும் இவற்றால் என் அறிவைச் சூழும் மறைப்பும் கூடி நின்று உன்னை நினைக்கவோ, நினைத்ததைச் சொல்லவோ இடம் கொடேன் என்று சொல்லுகின்றன; இதற்கு நான் என்ன செய்வேன்; இது முறையாகுமோ. எ.று.

     மன்னவன் - அரசன். ஞான மன்று - ஞானசபை. திருவடி ஒன்றையே பற்றுக் கோடாகவுடையவன் என்று சொல்லுதற்கு “அடியேன்” எனக் குறிக்கின்றார். இளைத்தல் - சோர்தல். துன்ன ஆணவம் - நெருங்கியுள்ள ஆணவமலம். வினை - துன்பம். மும்மலங்களாலும் உயிரறிவு மறைக்கப்படுதலால் “ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்” எனவுரைக்கின்றார். உன்னுதல் - நினைத்தல். ஆணவம் முதலிய மலங்கள் உயிரறிவை மறைத்துச் செயல்படாவாறு தடுப்பது பற்றி, “உனைத்தான் உன்னலா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன்” என வருந்துகின்றார். உலகில் பிறந்து வளர்ந்து நன்னெறிக்கண் வாழ்ந்து உய்திபெற வமைந்த எனக்கு இத்தடைகள் பொருந்தாவாம் என்பாராய், “இது தகுமேயோ” என வுரைக்கின்றார்.

     இதனால், ஆணவம் முதலாய மலப்பிணிப்பு தம்மை யடைவது பொருந்தாது எனப் புகன்றவாறாம்.

     (72)