3482. எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த
இளைப்பெல்லாம் இங்குதான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என்
கூடவே அடுத்ததென் அந்தோ
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே
மன்னவா நின்னலால் அறியேன்
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள் ஆவி
உன்னதே என்னதன் றெந்தாய்.
உரை: அருள் வள்ளலே, எனது வாழ்வுக்கு முதலாகிய பரம் பொருளே, அருளரசே, முன்னைப் பிறவிகளில் இகழ்ந்து நீக்கத்தக்க அச்சங்களாலும் துன்பங்களாலும் நான் அடைந்த சோர்வுகளை எல்லாம் போக்கிக் கொள்ளுதற்கே நான் இப்பிறவியை எடுத்தேனாக, மாயை முதலிய மலங்கள் என்னோடு தொடர்ந்து இருப்பது என்ன காரணமோ; இவற்றை விலக்கிக் கொள்வதற்கு உனது திருவருள் ஞானப் பற்றுக் கோடாவதன்றி வேறு துணையாதும் அறிகிலேன்; நான் நினைப்பதற்கும் உன்னைத் தவிர வேறு பொருளில்லை; என்னுடைய உடல் உயிர் பொருள் மூன்றும் என்னுடையவை யல்ல எ.று.
உரிய உணர்வு தந்து உயிர்களை வாழ்வித்தல் பற்றி, இறைவனை “வாழ்முதற் பொருளே” என வழுத்துகின்றார். “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” (பள்ளி) என மணிவாசகரும் உரைப்பது காண்க. நல்ல வினைக்கு நற்பயனும் தீய வினைக்குத் தீப்பயனும் உயிர்களை நுகர்வித்தலால், இறைவனை “மன்னவன்” என்கின்றார். பொருளாகக் கருதாமல் நீக்கத் தக்கதாகலின், “எள்ளலாம் பயம்” என்று கூறுகின்றார். அச்சத்தாலும் எய்தும் துன்பங்களாலும் உயிரும் உடலும் சோர்வடைதலின், பயத்தால் துயரினால் அடைந்த “இளைப்பெலாம்” என இசைக்கின்றார். முன்னைப் பிறவிகளில் அடைந்த அச்சம் துன்பம் இவற்றால் எய்திய சோர்வைப் பிறந்த பிறப்பில் ஆற்றிக் கொள்வது மறுபிறப்பின் குறிப்பாவது தோன்ற, “இங்கு நான் ஆற்றிக் கொள்ளவே யடுத்தேன்” என விண்ணப்பிக்கின்றார். மாயை யாதிகள் - மாயை கன்மம் மலம் ஆகிய மூன்றும். இளைப்பாற்றிக் கொள்ள வந்த எனக்குத் துணை புரியாமல் அறிவை மறைத்துக் கெடுக்கும் ஆணவம் முதலிய மூன்றும் வந்தடைந்ததின் காரணம் தெரியவில்லை என்பாராய், “மாயை யாதிகள் என் கூடவே யடுத்ததென்” என வினவுகின்றார். இவற்றின் உண்மையை உனது அருள் ஞானத்தால் அன்றி அறிதற்கில்லை என்பாராய், “நின்னலால் அறியேன்” எனக் கூறுகின்றார். உள்ளல் - நினைத்தல். இவற்றின் நினைவன்றி வேறொன்றும் என் மனத்தில் இல்லை யென்றற்கு, “உள்ளல் வேறிலை” என உரைக்கின்றார். உடல் பொருள் ஆவிகளில் உடல் உன்னதே, பொருள் உன்னது, ஆவி உன்னது என இயையும். என்னதன்று என்பதற்கும் இவ்வாறு ஒவ்வொன்றாக இயைத்துக் கொள்க.
இதனால், சோர்வு போக்கிக் கொள்ளப் பிறப்பெடுத்த தமக்கு ஆணவம் முதலிய மூன்றும் வந்து பற்றுதற்குக் காரணம் வினவியவாறாம். (73)
|