3483. என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும்
இல்லையே எந்தைஎல் லாம்உன்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம்
தமியனேன் தனைப்பல துயரும்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும்
மாயையும் வினையும்ஆ ணவமும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ
இவைக்கெலாம் நான்இலக் கலவே.
உரை: எனக்கென ஓர் சுதந்தரம் எள்ளத்தனையும் எனக்கில்லை, எல்லாம் உன் சுதந்திரமே யாகும்; உன்னை யடுத்துள்ள என்னை இச்சமயம் பலவேறு வகையான துன்பங்களும், வலிய சுமை போன்ற மயக்கங்களும், அச்சங்களும், மறைப்புகளும் மாயை வினை மலம் என்ற மூன்றும் இனிய சுவையையுடைய கனி போல் என்னைத் தின்கின்றன; இது முறையாகுமா; இவற்றிற்கு நான் இலக்காவதா; அருளுக. எ.று.
சுதந்தரம் - செயலுரிமை. எட்டுணை - எள்ளின் அளவு; எள்ளத்தனை யென்றுமாம். சிவன் ஒருவனே யன்றிப் பிறவாகிய உயிர்கள் எவற்றிற்கும் தற்சுந்தரம் இல்லையாதல் பற்றி, “எந்தை எல்லாம் உன் தன் சுதந்தரமே” என இயம்புகின்றார். இறைவன் ஒருவனே சுதந்தரமுடையவன்; பிற யாவும் பரதந்திரங்கள் என்று சிவாகமங்கள் உரைப்பதனால் வள்ளற் பெருமான் இவ்வாறு உரைக்கின்றார். “பரதந்திரியம் கரைகனி பந்தம்” என்பது ஞானாமிர்தம். நினைத்தல் சொல்லுதல் செய்தல் ஆகிய எல்லாவற்றிலும் சுதந்தரமில்லாத உயிர்களுக்கு, சோர்வு போக்கிக் கொள்ள வந்த தருணத்தில் இந்தத்துயர் வகைகளும் மயக்க வகைகளும் பிறவும் வந்துபற்றி அலைத்தல் கூடாது என விண்ணப்பிக்கின்றாராதலால், “அடுத்த இத்தருணம் தமியனேன்தனைப் பல துயரும் வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும் இன்சுவைக் கனி போல் உண்கின்ற தழகோ” என்று கூறுகின்றார். தற்சுதந்தரம் சிறிதுமில்லாத இக்குற்றங்கள் போன்று தாக்குதல் முறையாகாது என வேண்டுகின்றாராதலின், “இவைக்கெலாம் நான் இலக்கலவே” என உரைக்கின்றார்.
இதனால், தமது தற்சுதந்தர மின்மையை வள்ளற் பெருமான் எடுத்துரைத்தவாறாம். (74)
|