3484.

     அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என்
          அப்பனே நினைமறந் தறியேன்
     செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு
          சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
     பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ
          பிழைத்தனன் ஆயினும் என்னைக்
     குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின்
          குணப்பெருங் குன்றினுக் கழகோ.

உரை:

     எனக்கறிவு சிறிது வந்த நாள் முதல் எனக்குத் தந்தையாகிய நின்னை மறந்ததில்லை; அடக்கமில்லாத சிறு பருவத்தும் உன்னைத் தவிர வேறு பொருளை நினைத்ததில்லை; உலகில் வேறு பிழையொன்றும் நான் செய்ததில்லை; அங்ஙனம் பிழை செய்திருப்பேனாயின் பொறுத் தருளல் வேண்டும்; என்னை அடியனாகக் குறிக்கொண்ட பிறகு குற்றம் காணுதல், பெருங் குணக் குன்றாகிய உனக்கு அழகாகாது; கொண்டு குலம் பேசுவது நன்றன்று. எ.று.

     அறிவு, நல்லதன் நலமும் தீயதன் தீமையும் தெரிந்துணரும் அறிவு. பிறந்த பொழுதே இவ்வறிவு அமைவது இல்லையாதலால், “அறிவொரு சிறிதிங்கறிந்த நாள் முதல்” எனவுரைக்கின்றார். சிறு பருவத்தவர் அடக்கமின்றித் துள்ளித் திரியும் இயல்பினராதலால், “செறிவிலாச் சிறிய பருவம்” எனச் சிறப்பிக்கின்றார். எதனையும் தக்கது என ஏற்றுத் தலை வணங்கும் தன்மை அப்பருவத்து எய்தாதாயினும் தான் அச்சிறு பருவத்தும் சிவமே பொருளெனத் தேர்ந்து கொண்டமை விளங்க, “வேறு சிந்தை செய்து அறிந்திலேன்” என வுரைக்கின்றார். தமது அறிவறிய குற்றம் ஒன்றும் செய்யாமை புலப்பட, “உலகில் பிறிதொரு பிழையும் செய்திலேன்” என்றும், ஒருகால் தன்னை யறியா வகையில் பிழை செய்திருந்தால் அதனைப் பொறுத்தருள வேண்டுவாராய், பிழைத்தனன் ஆயினும் என்னைக் குறியுறக் கொண்டே குலம் குறிப்பது நின் குணப் பெருங்குன்றினுக்கு அழகோ” எனக் கூறுகின்றார். நற்குணமுடைய சான்றோர் ஒருபொருளைக் கொள்ளுதற்கு முன் அதன் குலமும் குணமும் காண்பதே யன்றிக் கொண்ட பிறகு அவற்றைக் கண்டுரைப்பது இல்லையாதலால், “என்னைக் குறியுறக் கொண்டு குலம் குறிப்பது அழகோ” என மொழிகின்றார். குணநலங்கள் உருவாய் அமைந்து சலியா நிலையுடைமை பற்றிச் சிவபெருமானை, “குணப் பெருங்குன்று” என்று குறிக்கின்றார்.

     இதனால் பிழை பொறுத்தல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (75)