3485. ஐயநான் ஆடும் பருவத்திற் றானே
அடுத்தநன் னேயனோ டப்பா
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென்
புகல்என அவனும்அங் கிசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது
மெய்யருள் மீட்டிட மீண்டேம்
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய்
இன்றுநான் சொல்லுவ தென்ன.
உரை: ஐயனே, நான் விளையாடும் பருவத்தில் எனக் கமைந்த நண்பனோடு அப்பா, பொய்ம்மை நிறைந்த இவ்வுலகில் எனக்கு ஆசையில்லை; உன் கருத்து யாது சொல் என்று கேட்க அவனும் என் சொல்லுக்கு இசைந்து மெய்ம்மையாகத் துறவு கொள்வோம் என ஓரிடத்திற்குச் சென்று பின்பு தெளிவுற்று உன்னுடைய திருவருள் உணர்வு தோன்றி அது கூடாது என விலக்கவே நாங்கள் திரும்பிவிட்டோம்; தூயனாகிய நின்னுடைய திருவுள்ளம் இதனை அறிந்ததாகலின் இன்று நான் அதனைத் திரும்ப எடுத்துச் சொல்வதனால் என்ன பயன். எ.று.
ஆடும் பருவம் - விளையாடும் பருவம். நேயன் - நண்பன். இது நேசன் எனவும் வரும். பொய்ம்மை நிறைந்தவுலகைப் “பொய்யுலகு” எனப் புகல்கின்றார். உலகியலின் பொய்ம்மை ஒழுக்கத்தை எடுத்துரைத்து நண்பனையும் உணர்த்தி இசையச் செய்தே வள்ளற் பெருமான், “பொய்யுலகு ஆசை எனக்கிலை உனக்கென் புகலென” கேட்கின்றார். நண்பன் உண்மையுணர்ந்தமை விளங்க, “அவனும் அங்கு இசைந்து மெய்யுறத் துறப்போம்” என்று சொல்லுகிறார். இருவரும் துறவி ஒருவர்பால் சென்றமை புலப்படப் “போய்” என்றும், அவர்களது இளமை நோக்கி அப்பெரியவர் விலக்கினமையின் இருவரும் மீண்டமை தோன்ற, “நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்” என வுரைக்கின்றார். துறவுடை” பெரியவர் உரைத்த அருளுரையை இறைவனது திருவருள் எனக் கருதினமையின், “மெய்யருள் மீட்டிட” என விளம்புகின்றார். துறவு மேற்கொள்ளத் துணிந்து சென்று பின்னர் அதனைக் கொள்ளாது விலகினமை தமது குறைகளில் ஒன்றாக எண்ணுகின்றாராதலால், “துய்ய நின்னுள்ளம் அறிந்ததே” என்றும், “இன்று நான் சொல்லுவது என்னே” என்றும் சொல்லுகின்றார்.
இதனால், துறவு மேற் கொள்ளாது விலகினமை விளம்பியவாறாம். (76)
|