3486.

     தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே
          தெய்வமே தெய்வமே எனநின்
     சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன்
          தந்தையும் குருவும்நீ என்றேன்
     பேர்விலா துளத்தே வந்தவா பாடிப்
          பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
     ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன்
          இன்றுநான் உரைப்பதிங் கென்னே.

உரை:

     நன்று தீங்குகளைப் பகுத்தறிய வாராத சிறுபருவத்திலேயே தெய்வம் என்று நின்னையே சார்பாகக் கொண்டு பிற சார்புகள் அனைத்தையும் கைவிட்டு எனக்குத் தந்தையும் குருவும் நீயே என்று கொண்டேன்; அதனால் உள்ளம் தளராது நினைவில் வந்தவற்றைப் பாடிப் பிதற்றினேன்; பிறர் என்னைப் பற்றிப் பாடியதையும் பொருளாகக் கொண்டிலேன்; நினைத்தற் கில்லாத பிழைகள் யாதொன்றையும் செய்தறியேன்; ஆகவே இப்பொழுது யான் இவ்விடத்து உரைப்பதற்கு யாதொன்றும் இல்லை. எ.று.

     நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து நல்லதை மேற்கொண்டு தீயதை விலக்கும் செயற் பண்பில்லாத இளமைக் காலத்தை, “தேர்விலாச் சிறிய பருவம்” எனச் செப்புகின்றார். மனத்திண்மையில்லாத சிறு பருவத்திலேயே தெய்வமே திண்ணிய துணையாம் எனக் கருத்திற் கொண்டு பிறர் பொருள்கள் அனைத்தையும் சார்பாகக் கொள்ளாது விடுத்தமை விளங்க, “தெய்வமே தெய்வமே என நின்சார்வு கொண்டு எல்லாச் சார்வையும் விடுத்தேன்” என இசைக்கின்றார். தந்தை குரு என்ற சார்புகளையும் சிவனே என எண்ணினமை விளங்க, “தந்தையும் குருவும் நீ என்றேன்” என்று கூறுகின்றார். தேர்விலாச் சிறு பருவத்தில் உள்ளத்திற் படியும் கருத்து ஆயுள் வளர வளர மாறுதற்கு இடமுண்டாயினும் தமது உள்ளம் அவ்வாறு மாறாமை தோன்ற, “பேர்விலாது” என்று குறிக்கின்றார். இந்நிலையில் தாம் செய்தது கூறுவாராய் நினைவில் எழுந்தவை எல்லாவற்றையும் இறைவனை நோக்கிப் பாடியதாகக் கூறலுற்று, “உளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன்” எனவும், தாம் பாடியவற்றை பிறரிடம் காட்டி இன்புற்றதில்லை யென்றற்கு, “பிறர் மதிப்பறியேன்” எனவும் உரைக்கின்றார். என் செய்கைகளை ஆராய்ந்து காணத் தக்க பிழை ஒன்றையும் செய்ததில்லை என்பாராய், ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன்” என்றும், அவற்றை ஒருவாறு ஆராய்ந்து கண்டு உரைப்பினும் பயனில்லை என்ற கருத்தால், “இன்று நான் உரைப்பதிங் கென்னே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், சிறு பருவத்திலேயே சிவனே தெய்வம் எனத் தேர்ந்து கொண்டமை தெரிவித்தவாறாம்.

     (77)