3487.

     பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை
          புரிந்தது போலவே இன்றும்
     செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத்
          தெய்வமும் குருவும் மெய்ப் பொருளும்
     நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும்
          நேயமும் நீஎனப் பெற்றே
     குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக்
          குதித்ததென் கூறுக நீயே.

உரை:

     எந்தையாகிய சிவபெருமானே! உன்னைத் தலைவனாக என்னுள்ளத்தில் பதிவித்துக் கொண்ட நாள் முதல் உனக்கு அடிமைப் பணி புரிந்தது போலவே இன்னாளிலும் உரைத்து நிற்கின்றேன்; அன்றியும் எனக்குரிய தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும், நெறி நிறுத்தும் நல்ல தாயும் தந்தையும், இல்வழி எனக்கு எய்தும் இன்பமும் நட்பும் எல்லாம் நீயே எனவுணரப் பெற்றுத் தெளிய யறிந்து அதன்பின் நான் வேறாக விலகியதுண்டோ சொல்லுக. எ.று.

     பொறித்தல் - பதிவித்தல். அடிமைப் பணி - பூசையும் திருப்பணியுமாம். செறித்து நிற்றல் - உரைத்து நிற்பது. வழிபடற்குத் தக்க உரிமையுடைய தெய்வம் என்றற்கு “உரிமைத் தெய்வம்” என்று மொழிகின்றார். மெய்ப்பொருள், உண்மை யுணர்வுக்கு அமைந்த பரம்பொருள் மக்களை நன்னெறிக்கண் நிறுத்திச் செலுத்தும் பெற்றோர்களை, “நெறித்த நற்றாயும் தந்தையும்” என நவில்கின்றார். இவ்வுணர்வுகளால் எய்தும் உண்மை இன்பத்தை “இன்பு” எனவும், நேயர்களை “நேயம்” எனவும் உரைக்கின்றார். இவ்வாறு தெய்வம், குரு, மெய்ப்பொருள் முதலியனவாக இறைவனைக் கொண்ட பின்பு வேறு எதனையும் கொள்ளாமைப் புலப்பட “குறித்தறிந்து அதன்பின் எந்தை நான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே” என இயம்புகின்றார். ஏறிக் குதித்தல் - ஈண்டு விலகி வேறுபடுதல் மேற்று.

     இதனால், வள்ளற் பெருமான் தமது உட்கோள் கூறியவாறாம்.

     (78)