3489. மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்
வள்ளலே நின்னைஅன் பாலும்
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால்
வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால்
உன்அருள் அறியநான் வேறு
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும்
திருவுளத் தடைத்திடல் அழகோ.
உரை: மை தீட்டிய கண்களையுடைய என் தாயாகிய உமையம்மையை ஒருகூறாகக் கொண்ட வள்ளலாகிய சிவபெருமானே! தாம் கொண்ட அன்பு மிகுதியால் நின்னை வைதவரையும் நான் விரும்புவதில்லை; அன்புடன் உன்னை வாழ்த்துகின்றவர்களை வாயார வாழ்த்தி உய்தி யுணர்த்தும் தவச் செல்வர் என்று எண்ணி இருக்கின்றேன்; இஃதன்றி உன்திருவருள் அறிய வேறாக நான் ஒரு தவறும் செய்ததில்லை; அங்ஙனம் செய்திருப்பேனாயின் அதனை நின் மனத்திற் கொள்ளுதல் அழகாகாது. எ.று.
கண்ணிற்கு மை தீட்டிக் கொள்வது மகளிர்க்கு இயல்பாதலின், உமாேதவியை, “மை தவழ் விழி என்னம்மை” எனப் புகழ்கின்றார். அன்பு மிகுதியாக யுடையவர் அதுவே ஏதுவாகத் தம்பால் அன்பு செய்யப்பட்டார்பால் பிணங்கி வைதுரைப்பது இயற்கையாயினும் நான் அவர்களை விரும்புவதில்லை யென்றற்கு, “நின்னை யன்பாலும் வைதவர் தமை நான் மதித்திலேன்; என வுரைக்கின்றார். உய்தவர் - உய்தி பெறுதற்குரிய ஞானம் வழங்கும் தவச் செல்வர். உறுதல் - உறுகின்றேன்; நட்பு செய்கின்றேன். எங்கும் எல்லாவற்றையும் பரந்து நின்றறியும் பண்புடையதாதலின், “உன்னருள் அறிய நான் வேறு செய்த தொன்றிலையே” எனப் பகர்கின்றார். நான் செய்த்து குற்றமாயினும் அதனைப் பொறுத் தருள்க என வேண்டுகின்றாராதலால், “செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ” என்று செப்புகின்றார்.
இதனால், தான் செய்தது கூறிப் பொறுத்தருள்க என வள்ளற் பெருமான் வேண்டிக் கொண்டவாறாம். (80)
|