3490. ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம்
ஆகமம் உரைவரைப் பெல்லாம்
காரண நினது திருவருட் செங்கோல்
கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி
நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
தாரணி யிடைஇத் துன்பமா திகளால்
தனையனேன் தளருதல் அழகோ.
உரை: வேதங்களால் சொல்லப்பட்ட அண்ட வரைப்புகள் எல்லாவற்றிற்கும், ஆகமங்களால் உரைக்கப்பட்ட அண்ட வகைகள் எல்லாவற்றிற்கும் காரணமாகிய நினது திருவருட் செங்கோல் எண்ணுதற்கரிய இன்பத்தில் ஓங்கி, நாரணன் முதலிய தேவர்கள் போற்றிப் புகழ விளக்கமுற்று நடக்கின்ற பெருமையை நான் நன்கு அறிந்தும் நிலவுலகின்கண் துன்ப வகைகளால் நினக்கு மகனாகிய நான் சோர்வடைதல் அழகாகுமா. எ.று.
ஆரணங்கள் - வேதங்கள். பல்வேறு வகையான அண்டங்களை வேதங்கள் உரைப்பதும், பலவாகிய ஆகமங்கள் வேறுவகை அண்டங்களை யுரைப்பதும் உண்டாதலால், “ஆரணம் உரைத்த வரைப்பெலாம்” எனவும், “பலவாம் ஆகமம் உரை வரைப்பெல்லாம்” எனவும் வகைப்படுத்திக் கூறுகின்றார். ஆரணங்கட்கும் ஆகமங்கட்கும் அவை உரைக்கும் அண்ட கோடிகளுக்கும் நிமித்த காரணனாதலால், சிவனை, “காரண” எனக் குறிக்கின்றார். இறைவனது திருவருள் ஒளி இவ்வண்ட கோடிகள் அனைத்திலும் பரவி யின்பம் செய்தலால், இவைகளில் இருந்தருளும் நாராயணன் முதலிய தேவர்கள் இன்ப வாழ்வு பெற்றுச் சிறப்புறுகின்றார்களாதலால், “திருவருட் செங்கோல் கணிப்பரும் களிப்பிலே ஓங்கி நாரணர் முதலோர் போற்றிட” எனவும், ஏனை வுயிர்களும் அவ்வருட் செங்கோல் நீழலிலே இனிது வாழ்தல் விளங்க, “விளங்கி நடக்கின்ற பெருமை” எனவும் இச்செய்திகளை யறிந்திருந்தும் இன்பத்தில் கழித்தலின்றித் துன்ப வகைகளால் தான் வருந்துவது முறையாகாது என்றற்கு, “தாரணியிடை யித்துன்பமாதிகளால் தனையனேன் தளருதல் அழகோ” எனச் சாற்றுகின்றார். கணிப்பு - எண்ணுதல்.
இதனால், இறைவனது அருட் செங்கோல் அண்ட கோடி யனைத்திலும் பரவி யின்பம் செய்யவும், அதனைத் தெளிய அறிந்து வைத்தும் தனக்குத் தளர்ச்சியுண்டாதல் கூடாதென வள்ளற் பெருமான் உரைத்தவாறாம். (81)
|