3491. பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப்
பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல்
உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில்
சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால்
மகன்மனம் வருந்துதல் அழகோ.
உரை: நில முதல் நாத தத்துவம் ஈறாகவுள்ள பணிகள் எல்லாவற்றையும் கடந்து அவற்றிற்கு அப்பாலுக்கு அப்பாலு முள்ளவற்றிற்கு ஓர் ஒப்பற்ற முதல்வனாய்த் தனது திருவருட் செங்கோன்மை சொல்லுதற்கரிய பெருமையால் உயர்ந்து ஓங்கி சீர் திகழ விளங்க நடத்தி மெய்ம்மை என்ற ஞான சபையில் சிறந்து உறுகின்ற உண்மைத் தந்தையாக நீ யிருக்க, நீண்ட கடல் சூழ்ந்த வுலகில் அச்சம் அவலம் முதலியவைகளால் மகனாகிய யான் மனம் வருந்துவது அழகாகுமோ; ஆகாது. எ.று.
நிலம் முதல் நாதம் ஈறாக உள்ள தத்துவ நிலைகளைப் “பார் முதல் நாதப் பதி” என்கின்றார். இத்தத்துவ பதிகட்கு அப்பாலுள்ள தத்துவாதீத நிலகளை “அப்பாலும் அப்பாலும் அப்பாலும்” என அடுக்கிக் கூறுகின்றார். இத் தத்துவங்கட்கும் அவற்றில் அடங்கிய புவனங்கட்கும் தனிப்பெரும் தலைவனாதலின் சிவபெருமானை, “ஓர் முதல் என்றும், அவனது திருவருள் நலத்தைத் “திருவருட் செங்கோல்” என்றும், அது இக்கூறிய எங்கும் எப்பொருளிலும் கலந்து ஒளிரும் சிவனது திருவருள் வளத்தை, உரைப்பரும் பெருமையின் ஓங்கிச் சீர் பெற விளங்க நடத்தி” என்றும், அப்பெருமான் இருந்தருளும் நிலையை, “மெய்ப் பொது” என்றும் விளம்புகின்றார். அதனைச் சத்திய ஞானசபை எனவும் சான்றோர் கூறுவர். திருவருட் செங்கோன்மை நடத்தி ஞான சபையில் எழுந்தருளும் ஞான மூர்த்திக்கும் தமக்கும் உள்ள தொடர்பை, “தந்தை நீயிருக்க மகன் மனம் வருந்துதல் அழகோ” என வுரைக்கின்றார்.
இதனால், இன்ப வாழ்வளிக்கும் இறைவனாகிய சிவன் இருக்க மகனாகிய தான் வருந்துதல் முறையாகாது எனத் தெரிவித்தவாறாம். (82)
|