3492. ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந்
தப்பதி வரையும்அப் பாலும்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல்
செல்லஓர் சிற்சபை இடத்தே
சார்ந்தபேர் இன்பத் தனியர சியற்றும்
தந்தையே தனிப்பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்த விதத்தினும் நினக்கே
பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
உரை: நிறைந்த வேதாந்த நூல்கள் உரைக்கும் புவனங்கள் முதலாக யோகாந்த நூல்கள் உரைக்கும் புவனங்களிலும் அவற்றிற்கு அப்பாலும் ேதர்ந்து அருளாணையாகிய திருநெறிச் செங்கோன்மை நிலவ ஒப்பற்ற ஞானசபையின் கண்ணே யிருந்து அதைச் சார்ந்த பேரின்பம்
விளைவிக்கும் ஒப்பற்ற அரசு செலுத்தும் தந்தையாகிய சிவனே; ஒப்பற்ற பெரிய தலைவனே! நினது நெறியினின்று எவ்விதத்திலும் விலகுதலில்லாதவனாகிய நான் நினக்குப் பிள்ளையாதலால், நான் துன்பத்தால் வருந்துவது அழகாகுமா; ஆகாது. எ.று.
வேதாந்த நூல்களும் யோக நூல்களும் அவரவர் ஆன்ம முயற்சிக்கு ஏற்ப வமைந்த புவனங்கள் பலவற்றை யுரைப்பதால் “ஆர்ந்த வேதாந்தப்பதி முதல் யோகாந்தப் பதிவரையும் அப்பாலும்” என உரைக்கின்றார். சிவனது திருவருட் சத்தி இப்புவனங்கள் எங்கும் பரவி நிலவுவது பற்றி, “அருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்ல” எனத் தெரிவிக்கின்றார். அருட் செங்கோல் நடத்தும் இடம் இது எனக் குறிப்பாராய், “ஓர் சிற்சபை யிடத்ேத சார்ந்த பேரின்பத் தனியரசு இயற்றும் தந்தையே” எனக் குறிக்கின்றார். சிவனது தனியரசால் உயிர்கள் பேரின்பம் பெறுவது பற்றி, பேரின்பத் தனியரசு இயற்றும் தந்தையே” என உரைக்கின்றார். சிவனுக்கும் தனக்கும் உள்ள முறைமை காட்டுதற்குத் “தந்தையே” என்றும், தன்னைப் “பிள்ளை” என்றும் கூறுகின்றார்.
இதனால், பேரின்பத் தனியரசு இயற்றும் தந்தைக்கும் மகன் இன்பமிழந்து துன்புறுதல் முறையாகாது என விண்ணப்பித்தவாறாம். (83)
|