3493. சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத்
திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம்
தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும்
தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே
பில்ளைநான் வாடுதல் அழகோ.
உரை: எல்லாச் சித்திகளையும் செய்ய வல்லதாகிய ஞானத் திருச்சபையில் விளங்குகின்ற சத்திகளுக்கும், அச்சத்திகளையுடைய சத்தர்களுக்கும் நலம் பெருக, ஒப்பற்ற அருட் செங்கோல் செலுத்தி மெய்ம்மை ஞானத்தை விளக்கி வாழ்விக்கின்ற ஒப்பற்ற முதல்வனாகிய தந்தையே! தலைவனே! பித்துக் கொண்டோருடைய இயல்புடையவனாயினும் நினக்கு நான் பிள்ளையாதலால் துன்பங்களால் மெலிதல் அழகாகாது காண். எ.று.
சித்திகள் எல்லாவற்றையும் செய்ய வல்ல பெரியோர்கள் நிறைந்திருக்கும் ஞான சபையாதலால், “சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை” எனத் தெரிவிக்கின்றார். சத்திகள், ஜனனி, ஆரணி, ரோதைத்திரி முதலாகப் பலவாகலின், “சத்திகள் எல்லாம்” என்றும், அச்சத்திகள் எல்லாம் உடைய சத்தர்கள் பலவாதலின், “சத்தர்கள் எல்லாம்” என்றும் சாற்றுகின்றார். சத்திய ஞானம், உண்மை ஞானம். பித்தியல், பித்தர்களின் குணஞ் செயல்கள்.
இதனால், பித்தியலுடையதாயினும் பிள்ளையாகும் முறைமை பற்றித்தாம் துன்பத்தால் வாடுதல் அழகாகாது என விண்ணப்பித்தவாறாம். (84)
|