3494. சாற்றுபேர் அண்டப் பகுதிகள் அனைத்தும்
தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும்
சோதியால் விளக்கிஆ னந்த
ஆற்றிலே நனைந்து வளர்த்திடும் பொதுவில்
அரும்பெருந் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே
பிள்ளைநான் பேதுறல் அழகோ.
உரை: சிவாகமங்களும் புராணங்களும் உரைக்கின்ற அண்டப் பகுதிகள் எல்லாவற்றையும் அவற்றுளே தனித்தனியாக நிறைந்து விளங்கும் பிண்டங்கள் எல்லாவற்றிலும் தனது அருட் சோதியால் விளக்கிப் பேரானந்தமாகிய ஆற்றிலே தோய்த்து வளர்த்தருளும் சிற்சபையில் எழுந்தருளும் பெறற்கரிய தந்தையே, நினது திருவருள் இன்பத்தைப் பெறற்கு விழைந்தநான் தலைவனாகிய நினக்குப் பிள்ளையாம் முறைமை யுடையேனாதலால், நான் துன்பத்தால் வருந்துவது அழகாகாது. எ.று.
கந்த புராணம் முதலிய புராணங்களும், பௌட்கரம் சிவதருமோத்திரம் முதலிய ஆகமங்களும் எண்ணிறைந்த அண்டங்களை யுரைப்பதால், “சாற்று பேரண்டப் பகுதிகள் அனைத்தும்” என்றும், அவற்றுள்ளே அவ்வண்டங்களைப் போல எண்ணிறைந்த பிண்டங்கள் இருக்கின்றன என்பதற்கு, “தனித்தனி யவற்றுளே நிரம்பித் தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும்” என வுரைக்கின்றார். அருட் சோதி வடிவினனாதலால் அவனது மாபெரும் சோதி மேற்கூறிய அண்ட பிண்டங்கள் அனைத்தையும் இருள் நீக்கி யாளுதல் விளங்க, “சோதியால் விளக்கி” என்றும், அதனால் அவை பெறும் இன்ப நலத்தை “ஆனந்த யாற்றிலே” நனைத்து வளர்த்திடும் பொது” எனப் புகழ்கின்றார். இன்பம் பெறுதற்குரிய அருள் நெறியைப் பெறவேண்டும் என்ற விருப்ப முடைமையை, “இன்பப் பேற்றிலே விழைந்தேன் தலைவ” எனவுரைக்கின்றார்.
இதனால், அண்ட பிண்டப் பகுதிகள் அனைத்தும் சிவனது அருட் சோதியால் விளக்கமுற்று இன்பமுறும் திறம் கூறியவாறாம். (85)
|