3495. சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த்
திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும்
பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும்
நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன்
பிள்ளைநான் வாடுதல் அழகோ.
உரை: படிப்படியாய் நிறைந்த தத்துவங்கள் எல்லாமாய் அவையல்லவாய் விளங்குகின்ற ஒளியாய் அவ்வொளி சென்று பரவியுயரும் வெளியிடமாய் அவ்விடமெல்லாம் இருந்து விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பாலாய் எங்கும் எல்லாம் நிறைந்த சிற்சபையில் எழுந்தருளி அருளரசு இயற்றும் நீதியுருவாகிய நல்ல தந்தையே! இனி நான் பிறப்பு இறப்புக்களின்றி நின்னை விட்டுப் பிரியேனாயினும் பிள்ளையாகிய நான் துன்பத்தால் வருந்துதல் அழகாகாது, காண். எ.று.
ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூவகைப்பட்டு முப்பத்தாறாய் விரிந்து தாத்துவிகங்கள் அறுபதோடும் கூடித் தொண்ணூற்றாறாய்ச் சிறத்தலால், “சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய்” எனத் தெரிவிக்கின்றார். இவை யனைத்தும் உயிர்களின் பொருட்டு அமைந்தவையாதலின், சிவத்தின் வேறாயவையாதலால், “அல்லவாய்” எனவும், உண்மை நிலையை யுணர்த்துவதற்குத் “திகழ் ஒளியாய்” எனவும் செப்புகின்றார். ஒளி சென்று பரவி நிலவும் இடத்தை, “ஒளியெல்லாம் பிறங்கிய வெளியாய்” என்றும், வெளி சென்று பரவும் இடத்தை “பெருவெளி” என்றும், “அதற்கு அப்பால்” என்றும், அப்பெருவெளியிடத்துச் சிவம் இருந்து திகழும் பெருநிலையை, “அதற்கப்பால் நிறைந்த சிற்சபை” என்றும் உரைக்கின்றார். அந்த ஞான சபைக்கண் எழுந்தருளிச் சிவ பரம்பொருள் செய்யும் சீர்த்த தொழிலைக் குறிப்பதற்கு, “அருளரசு இயற்றும் நீதி நல்தந்தையே” என்றும் நிகழ்த்துகின்றார். சிவத் தொடர்பு பெற்ற துணிவால், “இனிமேல் பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டகலேன்” என்று கூறுகின்றார். “பெற்றலும் பிறந்தேன்” இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்” என நம்பியாரூரர் ஒருவர் கூறுவது காண்க. (86)
|