3496. எண்ணிய எல்லாம் வல்லபேர் அருளாம்
இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே
நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில்
தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும்
ஐயகோ வாடுதல் அழகோ.
உரை: எண்ணிய எல்லாவற்றையும் எண்ணியவாறு நல்க வல்ல பேரருளைச் செய்யும் ஒப்பற்ற தனித்தநெடிய செங்கோல் திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியிருந்து செலுத்துகின்ற ஒப்பற்ற சிவஞானத் தலைவனே, தண்ணிய திருவருளை நல்கியருளும் தந்தையே! மகனாகிய நான் இவ்வுலகில் அச்ச வகைகளாலும், துயர்களாலும் பற்றி யுள்ள ஐவகை மலங்களாலும் துன்புற்று வருந்துவது அழகாகுமா எ.று.
எண்ணியவற்றை எண்ணியவாறு நல்கும் திருவருளின் வன்மையை விளக்குதற்கு, “எண்ணிய எல்லாம் வல்ல பேரருள்” என்று உரைக்கின்றார். இறைவன் செலுத்துவது அருட் செங்கோலாதலின், “பேரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்” எனச் சிறப்பிக்கின்றார். அருளரசை யிருந்து புரியும் இடம் உணர்த்துதற்கு, “திருச்சிற்றம்பலத் தமர்ந்ேத நடத்தும் ஓர் ஞான நாயகனே” என்று நவில்கின்றார். சிவன் விரும்பி உறையும் இடமெல்லாம் ஞான சபையாதலால் “நண்ணிய திருச்சிற்றம்பலம்” என்று கூறுகின்றார். மலம் ஐந்தாவன; ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்பன.
இதனால் அச்சம் துன்பம் மலம் ஆகியவற்றால் துன்புறும் திறம் கூறியவாறாம். (87)
|