3497.

     கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில்
          காண்கின்ற காட்சிகள் எல்லாம்
     நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய்
          நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
     மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல்
          வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
     தலைவனே எனது தந்தையே நினது
          தனையன்நான் தளருதல் அழகோ.

உரை:

     சாத்திர வகைகள் யாவும் உரைக்கின்ற பிறப்புக்களிலும், எப்பிறப்புத் தோறும் காண்கின்ற காட்சிகள் அனைத்திலும் அவை காட்டும் நிலைகளிலும், அந்நிலை தோறும் தோய்ந்து நிறைந்த அனுபவங்கள் எல்லாம் இனிது விளங்க ஞான சபையின்கண் எழுந்தருளி மயங்குதலில்லாத ஒளியை யுடைய அருட்பெருஞ் செங்கோலை மேன்மையாக நடத்துகின்ற ஒப்புயர்வற்ற தலைவனே! எனக்குத் தந்தையே! நின்னுடைய மகனாகிய நான் துன்பத்தால் வருந்துதல் முறையாகுமோ.

கலைகள் - மெய்ந்நூல்களாகிய சாத்திரங்கள். உயிர்கள் செய்யும் வினைக்கு ஏற்ப அவை எய்தும் எண்ணிறந்த பிறப்பு வகைகள் எல்லாம் அடங்க, “கலை யெலாம் புகலும் கதி யெலாம்” எனக் கட்டுரைக்கின்றார். பிறப்புத் தோறும் உயிர்கள் பெற்று நுகரும் அனுபவங்களை, “கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிலை யெலாம் நிலையில் நேரந்து அனுபவம்செய் நிறைவெலாம் விளங்கிட” என்று கூறுகின்றார். எய்தும் பிறப்புக்களிலும் அவ்வவற்றின் பதங்கட்கு ஏற்ப அனுபவ நிறைவு வேறுபடுதலின், “நிலை யெலாம்” எனக் குறித்துரைக்கின்றார். அனுபவம், திருவருள் தோய்தலால் அன்றி நிறைவு பெறுதலின்மையால், “நிலையில் நேர்ந்தனுபவம்செய் நிறைவெலாம் விளங்கிட” என உரைக்கின்றார். அனுபவத்தால் அறிவு நிறைவுறுதலின், “அனுபவஞ்செய் நிறைவெலாம்” என்பது குறிக்கத் தக்கது. அறிவை மயக்குதலின்றித் தெளிவுறுத்தும் சிறப்பு நோக்கித் திருவருள் ஒளியை, “மலைவிலாச் சோதி” எனச் சிறப்பிக்கின்றார். இறைவனது செங்கோன்மை காலம் தோறும் இடந்தோறும் மயங்கி வேறுபடுதல் இல்லையாதலின், “வாய்மையான் நடத்தும்” எனப் புகழ்கின்றார். நலம் புரிவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாய்மை செங்கோன்மை நடத்தும் தந்தையாக விருக்கவும் மகனாகிய யான் துன்பங்களால் வருத்தப்படுதல் கூடாது என்பார், “தனையன் நான் தளருதல் அழகோ” எனச் சாற்றுகின்றார்.

     இதனால், தனையனாம் முறைமையால் தான் தளருதல் கூடாதென வருந்தியவாறாம்.

     (88)