3498.

     ஆதியே நடுவே அந்தமே எனும்இவ்
          வடைவெலாம் இன்றிஒன் றான
     சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்ே­த
          தூயபேர் அருள்தனிச் செங்கோல்
     நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை
          நிருத்தனே ஒருத்தனே நின்னை
     ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே
          உறுகணால் தளருதல் அழகோ.

உரை:

     தோற்றம், நடு, இறுதி யெனப்படும் இக்கூறுபாட்டு வகை யாதும் இல்லாமல் ஒன்றாய் விளங்குகின்ற சோதி வடிவாய்த் திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளித் தூய பெரிய அருளாகிய ஒப்பற்ற செங்கோல் நெறியில் செலுத்தி யருளும் ஒப்பற்ற பெரிய தலைமைப் பண்பை யுடைய கூத்தனே! ஒருத்தனே! உன்னையே புகழ்ந்து ஓதித் துதிக்கும் மகனாகிய நான் இவ்வுலகில் துன்பத்தால் மெலிதல் தகுதியாகாது அன்றோ. எ.று.

     தோற்றம், இடை, முடிவு என்ற கூறுபாட்டிற் கிடமின்றி ஏகமாய் விளங்கும் அருட் பெருஞ் சோதி வடிவானவன் சிவன் என்பது விளங்க, “ஆதியே நடுவே அந்தமே எனும் இவ்வடை வெலாம் இன்றி ஒன்றான சோதியே வடிவாய்” என வுரைக்கின்றார். திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளிக் கூத்தாடும் வடிவில் திருவருள் ஞானத்தை வழங்குதலின், “தூய பேரருள் தனிச் செங்கோல் நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே” என்று கூறுகின்றார். நிருத்தம் - கூத்து. ஒருத்தன், உமைக் கூறனாகத் தோன்றுதலின்றிச் சிவமேயாய் விளங்குதலின், “ஒருத்தனே” என வுரைக்கின்றார். நாளும் சிவனைப் புகழ்ந்தேத்துதலும், வாழ்த்துதலும் செய்தல் பற்றி, “நின்னை ஓதியே வழுத்தும் தனையன் நான்” எனப் புகழ்கின்றார். உறுகண் - துன்பம்.

     இதனால், நாளும் சிவனையே ஓதி வழுத்தும் தனக்குத் துன்பம் தோன்றி வருத்துதல் என்னை என வள்ளற் பெருமான் விண்ணப்பித்தவாறாம்.

     (89)