3499. அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே
அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும்
பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல
செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித்
துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
உரை: தந்தையே! திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அருளரசே! பெறுதற்கரிய பெரிய சோதி வடிவானவனே! அடியவர்கள் உன்னைப் பித்தன் என்றும், பேயன் என்றும் வைதுரைப்பினும் அவர்கட்கு மிக்க அருளைச் செய்கின்ற ஒப்பற்ற தலையாய சித்தத்தை யுடையவனே! எல்லாம் செய்ய வல்ல அருட் செல்வனே! சிறப்பெல்லாம் உடையவனே! சிவபெருமானே! தூயவனே! நின்னுடைய மகனாகிய யான் அறிவு மயங்கி மனம் துயரத்தில் மூழ்கி மெலிவது அழகாகுமோ, ஆகாது அன்றோ, எ.று.
அத்தன் - தந்தை. உலகியலில் சோதியை யுடைய ஏனைய பொருள்கள் போலன்றிப் பெறற்கரியதும் பெரியதுமாகிய அருட் சோதி வடிவினனாதலால், “அரும் பெரும் சோதியே” எனப் புகழ்கின்றார். நம்பியாரூரர் சிவபெருமானைப் பித்தன் என்றும் பேயன் என்றும் வைது பாடினாராயினும் அவரை வெறாது பேரருள் புரிந்தமையை வியந்து அடியார் பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள்புரி தனித் தலைமைச் சித்தனே” என உரைக்கின்றார். சித்தன் - சித்தத்தை உடையவன். எதனையும் எண்ணியாங்கு எளிதில் செய்ய வல்ல அருட் செல்வன் என்பது தோன்ற, “எல்லாம் செய்திட வல்ல செல்வனே” எனச் செப்புகின்றார். சிறப்பன் - எல்லாச் சிறப்புக்களையும் உடையவன். துயர்தல் - வருந்துதல்.
இதனால், சிவனுக்கு மகனாகும் முறைமையுடைய தான் துன்பத்தால் வருந்துதல் கூடாதென வள்ளற் பெருமான் தெரிவித்தவாறாம். (90)
|