3500. உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒருதனித் தந்தையே நின்பால்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம்
குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை
இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை
வழக்கிது நீஅறி யாயோ.
உரை: பெரிதாகிய திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற ஒப்பற்ற தந்தையே, நினக்கு யான் ஒரு குற்றமும் புரிந்தறியேன்; குற்றம் செய்துள்ளேன் எனில் அக் குற்றங்களை இத்தன்மையது என எனக்கு அறிவித்து அவற்றை உணரும் உணர்வு தந்து என்னைப் பழகுவித்தல் வேண்டும்; வேறு அயலார் போல இருப்பது தந்தைக்கு முறையாகுமா. இதனை நீ அறிவாய் அன்றோ. எ.று.
உற்றது - பெரியது. தில்லைச் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளும் பெருமானாகிய சிவன் எல்லா வுயிர்க்கும் தந்தையாம் முறைமை யுடையவனாதலால், “திருச்சிற்றம்பலத் தோங்கும் ஒரு தனித் தந்தையே” என்று போற்றுகின்றார். மலமறைப்பால் தாம் செய்த குற்றங்களைத் தாம் அறிய மாட்டாமை பற்றி, “நின்பால் குற்றம் நான் புரிந்திங் கறிந்திலேன்” எனப் புகல்கின்றார். குயிற்றல் - செய்தல். செய்த குற்றங்களை யறிந்தோர் அறிவிக்க அறிந்தாலன்றிக் குற்றங்கள் நீங்கி நன்னெறியில் நின்று பயிலுதல் இயலாத தொன்றாகலின், “அக்குற்றம் இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்” என்று கூறுகின்றார். அயலார் - பிறர் குற்றங்களையும் குணங்களையும் அறிந்தும் அறியார் போன்று இருப்பவர். மகன்பால் குற்றம் காணப்பட்ட வழி எடுத்துக்காட்டி நன்னெறிப் படுத்துதல் சான்றோனாகிய தந்தைக்குக் கடனாம் என்பாராய், “அயலார் போன்றிருத்தலோ தந்தை வழக்கிது நீ அறியாயோ” என விளம்புகின்றார்.
இதனால், செய்த குற்றங்களை எடுத்துக் காட்டி அறிவு தந்தருளல் வேண்டுமெனச் சிவன்பால் விண்ணிப்பித்தவாறாம். (91)
|