3501.

     குற்றமோ குணமோ நான்அறி யேன்என்
          குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்ே­த
     உற்றதா தலினால் உலகியல் வழக்கில்
          உற்றன மற்றென தலவே
     தெற்றென அருட்கே குற்றம்என் பதுநான்
          செய்திடில் திருத்தலே அன்றி
     மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை
          மரபிது நீஅறி யாயோ.

உரை:

     குணம் குற்றங்களின் இயல்பை நான் அறியேன்; அதற்குக் காரணம் என் கருத்தெல்லாம் திருச்சிற்றம்பலத்தே பொருந்தியிருப்பதாகும்; ஆதலால் உலக வாழ்வில் என்பால் நிகழ்ந்தன யாவும் என்னுடையவை ஆகா; தெளிவாக அவை திருவருட்கே யாகும்; குற்றம் என்பதை நான் செய்வேனாயின் உடனே என்னைத் திருத்துவது இன்ம அயலாரைப் போலப் பராமுகமாய் இருப்பது தந்தைக்கு முறைமையாகாது; இதனை நீ நன்கு அறிவாயன்றோ. எ.று.

     குற்ற மென்றும், குண மென்றும் ஒன்றினைச் செய்யுமிடத்து அறிவது இல்லையாதலின், “குற்றமோ குணமோ நான் அறியேன்” என்று கூறுகின்றார். அறிவுடையார்க்குச் செய்யப்படும் குற்றம் புலனாகுமாயினும் கருத்து ஒன்றாவிடத்து அது இயலாது. தமது அறிவு முழுவதும் திருச்சிற்றம்பலத்து இறைவன் திருவருளில் ஒன்றி யிருந்தமையால், அறியாராயினமை விளக்குவாராய், “என் குறிப்பெலாம் திருச்சிற்றம்பலத்தே உற்றது ஆதலினால்” என வுரைக்கின்றார். உலகியல் வாழ்வில் உண்டாயின குற்றங்கள் திருவருட் செயலாயின என்பாராய், “உலகியல் வழக்கில் உற்றென மற்றென தலவே தெற்றென அருட்கே” என மொழிகின்றார். மகன் குற்றம் செய்தவிடத்து அதனை எடுத்துக் காட்டித் திருத்துவது தந்தைக்குக் கடனாகுமே யன்றிப் புறக்கணிப்பதுத் தந்தைக்கு முறைமை யாகாது என்றற்கு, “அயலார் போன்றிருப்பதோ தந்தை மரபு” என்றும், இதனை நீ அறிவாய் இல்லை யென்பார், “இது நீ அறியாயோ” என இயம்புகின்றார்.

     இதனால், மகனாகிய தான் செய்த குற்றத்தைத் தந்தையாகிய நீ திருத்தியருளல் வேண்டுமென வள்ளற் பெருமான் சிவனை வேண்டுகின்றார்.

     (92)